பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

270 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பொருள் நன்பொருள். உழைப்பு என்ற உரிய சாசனத்தின் வழி கிடைத்த பொருள். அங்ஙனமின்றி, மறைமுகக் கொள்கைகளால் ஈட்டப் பெற்ற பொருள் "தீப்பொருள்”. அது பூரண உரிமையாக மாட்டாது. அப்பொருள்களை வெளவக் கருதுதல் ஒரோவழி பொய்ம்மையும் வாய்ம்மையிடத்தாதல் போல, ஏற்றுக் கொள்ளப்படும் என்பது வள்ளுவர் கருத்தா? அங்ஙனமாயின், மனித சமுதாயத்தில் தோன்ற வேண்டிய சிறந்த பொருளாதாரப் புரட்சியின் அடிப்படைக் கருத்து இக்குறிகளிலே அமைந்து கிடக்கிறது.

விதையொன்று போடச் சுரையொன்று முளைக்குமா? என்று சாதாரணமாக ஒரு பழமொழியுண்டு. வினைப்பயன் விளைவது உறுதி என்பது நம்முடைய மரபு. வினைப்பயன் என்பது, நம்முடைய சொந்தச் செயல்களின் பயன்களேயாகும். வெளவுதல் வழியாகப் பிறர் பொருளைக் கைப்பற்றுதல் பிறிதொரு தீமையைத் தோற்றுவிக்கவே செய்யும். யார் ஏமாற்றப்பட்டார்களோ அல்லது வஞ்சிக்கப் பட்டார்களோ அவர்கள் வெளவிப் பொருள் சேர்த்தானுக்கு நிரந்தரப் பகைவர்கள். அவர்களுடைய கை ஓங்குகிற போது, மீண்டும் தம் பொருளைச் சேர்த்துக் கொள்ளவும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளவுமே முயற்சிப்பர். ஆக, தொடர்ச்சி துன்பமே தரும். இதனையே, "அழக்கொண்ட எல்லாம் அழப்போம்” என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். தீமையிலிருந்து நன்மை தோன்ற முடியாது. ஆனாலும் ஒரு தீமையை ஒழிக்க இன்னொரு தீமையைக் கையாளுதல் அதுவும் தனிமனிதர்கள் தனக்குள்ளாகவே கையாளுதல் தவறு. நன்மை தராது. அதுமட்டுமன்று. - தீரா இடும்பையே தரும். இதனைத் தவிர்க்கவே நீதி தேவதை உருவாயிற்று. ஒரு மனிதன் தனக்கு இழைக்கப் பெற்ற அநீதியை நேரடியாக எதிர்க்கின்றபொழுது அநீதியான முறைகளையே கையாளுவான். நீதி தேவதை வழிச் செல்வானாயின் அநீதி