பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 273


நெருப்பை எரிக்கிறார்கள், தற்காலிகமாகப் பிறர் குற்றத்தில் குளிர் காய்கிறார்கள். ஆனால் அடையக் கூடிய பயனோ அழிவு! அழிவு! அழிவு!

அதனாலன்றோ அப்பர் அடிகளும்கூட சமுதாயத் தோடு பழகுதற்குரிய இனிய பழக்கமாக, குணங்களைச் சொல்லியும் குற்றங்களைப் பேசியும் வாழவேண்டும் என்று வலியுறுத்துகின்றார்.

சொல்லுதலுக்கும் பேசுதலுக்கும் இடையேயுள்ள வேற்றுமையைப் பற்றி நாம் சாதாரணமாக நினைத்துப் பார்ப்பதில்லை. ஆனால் அப்பரடிகள் பெரிய வேற்று மையைக் காண்கிறார். சொல்லுதல் என்பது பிறரிடத்தில் ஒருவர் இல்லாதபோது அவரைப் பற்றிய குற்றங்களைச் சொல்லுதலைக் குறிக்கும். அவ்வாறு சொல்லுதல் குற்றம். சொல்லுதல் மட்டும் குற்றமன்று. அத்தகு சொல்லாடலைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் குற்றம். அதனாலன்றோ, அறங்கூறவையில் இருபாலும் கேட்டு, மறுக்கவோ உடன்பாடாகவோ உரிய வாய்ப்புக்கள் முழுமையும் கொடுத்து, பின் அறங்கூறப் பெறுகிறது. ஆனால், இன்றோ புறங்கூறலே பெருகி வளர்ந்திருக்கிறது. அதையும் உண்மை யென்று நம்பி உரியவரைக் கேட்காமலேகூட மாறுபாடும் சினமும் கொள்கிறவர்கள் பொறுப்பு வாய்ந்தவர்களிற்கூட இருக்கிறார்கள் என்றால் என்னென்று கூறுவது?

ஒருவர் இல்லாதபோது அவருடைய குற்றங்களைச் சொல்லுதல் -- கூறுதல் புறங்கூறல் ஆகும். அதனைக் கூடாதென்று தேவாரம் கூறுகிறது. அடுத்து, ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவையிலும் கூட புறங்கூறும் குற்றம் விளக்கப் பெறுகிறது. “தீக்குறளைச் சென்றோதோம்” என்பது ஆண்டாள் வாக்கு. குறளை என்பது கோள், புறம் ஆகிய சொற்களைக் குறிக்கும். அதுவும் தீக்குறளை என்று சொன்னது உண்மையல்லாத பொய்யை, தீமை பயக்கக்

தி-18,