பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 277


வாழ்பவர்கள் அழுக்காற்றினைத் தோற்று விக்கிறார்கள். பலர் துய்க்காதனவற்றைப் பலர் அறியத் துய்த்து மகிழ்கிறார்கள்.அவாவினைத் தோற்றுவிக்கிறார்கள். ஆதிக்கம் செலுத்துபவர்கள் அடிமைத் தனத்தையும் அதுவே வளர்ந்துழி அடங்காமையும் தோற்றுவிக்கிறார்கள். இங்ஙனம் ஆய்வு செய்யின் குற்றங்களை உடையோரும் குற்றங்களைச் செய்வோரும் மட்டுமே பொறுப்பினர் ஆகார். அவர்களோடு தொடர்புடைய மற்றவர்களுக்கும், குறிப்பாகச் சமுதாய அமைப்பிற்கும் நிறையப் பொறுப்பும் பங்கும் உண்டு, இங்ஙனம் ஆராய்ந்து முடிவு செய்வதே நியதியும், நீதியும் ஆகும். இந்த ஒப்பற்ற நீதியைப் புதுமை என்றும், பொதுமை என்றும் இன்று பலர் கூறுகின்றனர். ஆனால் நமது வள்ளுவர் அன்றே கூறியுள்ளார்.

"ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு." (190)

என்பது குறள். இந்தக் குறள் நினைந்து நினைந்து உணரத் தக்க குறள். புதுமையும் புரட்சியும் நிறைந்த குறள். நிலைபெற்ற மனித உயிர்கள் உலகத்தைப் பற்றிப் பிடித்து அலைக்கும் பகைமைக்கும் ஒழுக்கக் கேட்டிற்கும் அருமருந்தென விளங்கும் குறள். ஏதிலார், அயலார் என்பது பொதுவான பொருள். சிறப்பாக மாறுபட்ட பகை உணர்ச்சி உடையவர் என்றும், பொருள் கொள்ளலாம். முதலில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரை அயலார் பகைவர் என்று கருதுதலே அடிப்படையில் தவறு. அங்ஙனம் கருதுகின்ற பகையினாலேயே நல்லனவும் தீயனவாகத் தோன்றும். அன்புடையார் மாட்டுத் தீமையே தோன்றினாலும், நன்மையே தோன்றும். ஆதலால் ஒருவன் பிறிதொருவனை ஏதிலானாகக் கருதுதல் மூலமே குற்றங்கள் தோன்றுவதற்குரிய களம் ஏற்பட்டுவிடுகிறது.