பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

286 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


"தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்." (202)

என்று குறிப்பிடுகின்றார். தீயவை தீய பயத்தலால் என்ற சொற்றொடரும், தீயினும் என்பதிலுள்ள உம்மையும் அறிவுக்கு விருந்து, ஆழச் சிந்திப்பாரின் அக உலகிற்குப் பாதுகாப்பு.

தீமை செய்வோர் தீமை செய்யட்டும். செய்து கொண்டே இருக்கட்டும். அதனால் நாய்கள் தாம் கக்கியவற்றைத் தாமே தின்பது போலத் தம்முடைய செயல்களின் விளைவுகளை, அவர்களே அனுபவிப்பார்கள். அறக்கடவுள் சூழ்ந்து ஊட்டுவிக்கும். ஆதலால், அச்சமின்மை பேசிய திருவள்ளுவர் அஞ்சச் சொல்லுகிறார். தீயனவற்றிற்கு அஞ்சச் சொல்கிறார். புறத்தில் தாக்கும் தீமைகளைக் கண்டு அஞ்சுவது போலவே, ஏன், அதனினும் ஒருபடி மேலாக அகத்தில் தோன்றித் தாக்கும் தீமையைக் கண்டு, அஞ்சச் சொல்கிறார். மடியில் தீயினை கட்டிக்கொண்டு, நானிலத்தில் நடப்பாரில்லை. அதுபோல் மனத்தில் தீமை தாங்கி நடப்பாருமில்லை என்கிற நிலை உருவாக வேண்டும். அதுவே வள்ளுவர் உலகம்.

உயிர் வாழ்வான் யார்?

திருக்குறள் ஒரு சமுதாய ஒழுக்க அமைப்பு நூல். மனிதர்கள் தம்முள் கூடிவாழக் கடமைப்பட்டவர்கள். அதுவே, மனித நாகரிகத்தின் விழுமிய சிறப்பு. 'மனிதன் ஒரு சமூகப் பிராணி' என்கிறார் ஓர் ஆங்கிலப் பெரும்புலவர். விலங்குகளில் கூட்டு வாழ்க்கை இல்லை. ஒரோ வழி சில விலங்கினங்களிடத்தே கூட்டு வாழ்க்கைமுறை இருந்தாலும் கூட அது அச்சத்தின்பாற் பட்டதே யொழிய, அன்பிற்பாற் பட்டதன்று. சமுதாயக் கூட்டு வாழ்க்கையை வளர்ப்ப தென்பது மிக நுண்ணிய ஆற்றல். தம் இச்சைவழிச் செல்லும்