பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

296 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பெறவேண்டிய பெரும் பேறு. அன்பு நெறியில் பல்லாண் டொழுகியவர்களுக்கே அருள் உணர்வு அரும்பும். உலகியலில் பொருள் உடையார் பலர். அருளுடையார் அருமையினும் அருமை. எனினும், வள்ளுவர் காலத்திலேயே ஒரு பொய்வாதம் தோன்றியிருந்திருக்கிறது. செல்வம் உடைமை புண்ணியத்தின் பயன் - அருளின் ஆக்கம் என்றெல்லாம் பிழைபடக் கருதி வந்திருக்கின்றனர். இதனைத் திருவள்ளுவர் கடுமையான குரலில் மறுக்கிறார். பொருட் செல்வம் பூரியர் கண்ணும் உள' என்று இடித்துக் கூறுவதன் மூலம், மனிதனின் தகுதிப்பாட்டுக்கு, பொருள் உடைமையைத் திருவள்ளுவர் அளவுகோலாகக் கையாள விரும்பவில்லை. திருவள்ளுவர் மனிதகுலத்தை ஒன்றாக இணைத்து 'ஓருலகம் சமைப்பதையே இலட்சியமாகக் கொண்டவர். அத்தகைய இலட்சிய உலகத்தைப் படைப்பதற்கு அன்பும் அருளுமே இன்றியமையாத் தேவை. அவையே துணை செய்ய முடியும் என்று அவர் கருதினார். அந்த நம்பிக்கையில் தோன்றியதே திருக்குறள்.

வாழ்க்கையின் தொடக்க நிலை அன்பு. முழுநிலை அருள். இத்தகு அருள் உணர்வு துன்பத்தைக் கண்டால் துடிக்கும். துன்புறுத்தலுக்கு நாடு, இன மொழி வேறுபாடு ஏது? யார் துன்புற்றாலும், எவ்வுயிர் துன்புற்றாலும், இதயங்கலந்த அருள் உணர்வோடு துன்பம் துடைப்பவனே மனிதன். அதனாலன்றோ, வாடிய பயிரிலிருந்து, வாட்டமுறும் மக்கள்வரை, வாட்டம் நீக்கி வளம் சேர்க்கும் வான்மழை அருளாயிற்று! பற்றுக் கோடின்றி பாரில் உள்ள உயிர் அனைத்தும் துய்த்து வாழ்ந்து தூநெறிசேரத் துணைநிற்கும் இறைவனின் கருணை அருளாயிற்று. பொருட் செல்வம் தேடி அலையும் மனித உலகம் உடன் கருணையையும் நோக்கி அலையுமானால், பெரும் பயன் பெறும்; அமைதி நிலவும்: வந்த காரியமும் நிறைவுறும்.