பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 297



ஈர நெஞ்சினர் இறைவனைக் காண்பார் என்றார் அப்பரடிகள். உமிழ்நீரால் தொண்டையை நனைத்து உலாவருதல் போல, பருகும் நீரால் வயிற்றை ஈரப்படுத்துவது போல, காய்ச்சற் பாட்டில் திகழும் இவ்வுடலை. நீரில் அமிழ்த்தி நனைப்பதுபோல, நெஞ்சத்தையும் இனிய அருளில் நனைக்க முயற்சிப்போமாக!

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை!

மனித சமுதாய வாழ்க்கையின் இரட்டை நாடிகள் பொருளும் அருளும் ஆகும். இவை இரண்டும் முரண்பட்டன அல்ல. இணைந்த இரட்டைகளாம். ஒன்றின்றி ஒன்றில்லை. ஒன்றற்கொன்று அரணுமாகும். ஒன்று பிரிதொன்றைக் கொண்டு வந்து சேர்க்கும். இவ்விரட்டை எங்காவது பிரிந்து காணின், அது பொருளுமன்று; அருளுமன்று. அறியாதார் சிலர், அருள் உணர்ச்சியால் பொருளை இழக்க நேரிடும் என்பர். பொருள் இழத்தலே, மேலும் பெறுதற்குரிய வழி! ஆனால், சூதில் இழத்தல் இதில் சேராது. அருள் கருதி, பசித்தவர் பசிப்பிணி நீக்கப்பொருளை இழப்பவர் பொருளை இழப்பதில்லையே! இதனை வள்ளுவம், பொருள் வைப்புழி என்றது.

பொருளில்லாருக்கு இவ்வுலகம் இல்லை. இது வள்ளுவத்தின் தெளிந்த முடிபு. ஆனால், இன்று நாட்டில் பொருள் என்பதற்குப் பிழையான கருத்தே கொள்கின்றனர். பொருள் என்பது இன்று நாணயமாற்று விகிதத்தில் நம்மிடையே நடமாடுவதன்று. நாணயத்திற்குள்ள மதிப்பு அதில் கலந்திருக்கிற உலோகத்தைப் பொருத்ததன்று. ரூபாய் நோட்டுக்குள்ள மதிப்பு, அது செய்யப்பட்டுள்ள தாளுக்குரியதன்று. அதனுடைய மதிப்பு, அதற்குப் பின்னணியாகவுள்ள மனிதர்களுடைய அனுபவத்திற்குள்ள பொருள்களை வைத்தேயாகும். இன்னும் தெளிவாகக் கூறினால் அப்