பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

298 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பொருள்களை உற்பத்தி செய்வதற்கு மனிதன் செலவழித்த அறிவு - உடல் உழைப்புக்களை மையமாகக் கொண்டதேயாகும். பொருள்களை உற்பத்தி செய்வதற்குரிய உழைக்கும் சக்தியை எவர் உடையவராக இருக்கிறாரோ அவரே அந்த அளவுக்குப் பொருள்களையோ நாணயங்களையோ, பெறவும் அனுபவிக்கவும் உரியவர் என்ற தியதியே உயர்ந்த ஒழுக்கமான நியதி. இந்த நியதி நின்று நிலவினால் நீதியும் நின்று நிலவும். இன்று நம்மிடையில் இந்த நியதியுமில்லை; நீதியுமில்லை! உழைப்பென்றால் இன்னதென்றே அறியாத ஒரு நூறு பேர்களிடம் பல நூறு கோடியல்லவா முடங்கிக் கிடந்திருக்கிறது! இந்த முடக்கத்தை உடைத்து, மக்கள் மன்றத்திற்கு மடைமாற்றிய பெருந்தகைமை சான்ற பாரதப் பிரதமர் இந்திரா காந்தி, இந்த நாட்டின் வரலாற்றில் புதுயுகத்தைத் தோற்றுவித்து, புகழ்பெற்று விளங்குகிறார்கள்.

பொருள் என்பது மனிதன் உண்டு, தின்று, உடுத்தி அனுபவிக்கத் தக்கனவேயாம். உடல் - உயிர்க்கூட்டு நிலைபெற்றியங்க இந்த எந்திர வாழ்க்கைக்கும் எரிபொருள் தேவை. அதுவே தம் உணவு. உணவில்லாதார், இவ்வுலகத்தில் இவ்வுடலுடன் கூடி வாழ்ந்திடுதல் இயலாது. இதனையே திருவள்ளுவர் பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்றார். இவ்வுலகம் என்பது அண்மைச் சுட்டு. இவ்வுலகம் என்பது குடும்பத்தைக் குறிக்கும். பொருள் பெற்று கூடித் துய்த்து மகிழ்வதுதானே குடும்பம்! அஃதில்லையேல் குடும்பம் ஏது? அதனால், பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்றும் கூறலாம். அடுத்து அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை" என்று கூறுகிறார் அவ்வுலகம் என்பதை வீடு என்று பொருள் கொள்வது மரபு. அங்ங்ணம் பொருள் கொள்வதில் தவறில்லை. ஆயினும், இந்த 'அவ்வுலகம்' என்பது கேள்விக்குறி! அஃது அறிவொடு படாதது. அதனால் ஆய்வு இருக்கவே செய்யும், அதைவிடச் சிறப்பாக அருளின் பொருள் விளக்கமாக விளங்கும் சிறந்த