பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 299


பொருள் ஒன்று கொள்ளமுடியும். அவ்வுலகம் என்பது சேய்மைச் சுட்டு. குடும்பத்தினின்று விலகி, சற்றுத் தூரத்தில் இருப்பது. அதுவே மக்கட் சமுதாயம்! பொருளுடையான் அருள் உணர்ச்சியுடையவனாக - மக்கட் சமுதாயத்திற்குப் பயன்படும் வழியில் பயன்படுத்தத் தவறிவிடுவானானால் அவனுக்குச் சேய்மையில் விளங்கும் சமுதாயம், அவனை நினைத்துப் பார்க்கமாட்டாது. அவனை ஒரு பொருளாக மதிக்கமாட்டாது. சமுதாயத்தின் மத்தியில் அவனைப் பற்றிய பேச்சு இருக்காது. ஒரோ வழி இருந்தாலும் அது பேணுதற்குரிய பெருமையைத் தராது; சிறுமையையே தரும் அவ்வுலகம் என்பதற்குச் சமுதாயம் என்று பொருள் கொள்வதே ஐயத்திற்கிடமின்றித் தெளிவுபடுத்துவதாகவும், அருளுடைமை விளக்கத்தின் மையமாக இருக்கிற சமுதாயத்தைப்பற்றி நிற்பதாகவும் இருக்கிறது. இது சிறந்த கருத்தாகும்.

"அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை; பொருளில்லார்க்கு
இவ்வுலக மில்லாகி யாங்கு." (247)


பொருளைப் போற்று


திருவள்ளுவர். வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட கற்பனை உடையவரல்லர். அவருடைய சிந்தனைப் போக்கு வாழ்வியலை ஒட்டியே அமைந்திருந்தது. எதார்த்த உண்மைகளுக்கு அவர் மாறுபட்டவரல்லர். ஆதலால், மனித வாழ்க்கைக்கு மிகமிக இன்றியமையாததாகிய பொருளைப் பற்றிய திருவள்ளுவரின் கருத்து இரண்டுபட்டதன்று. குழப்பமானது மன்று மிக மிகத் தெளிவானது. பொருளின் அடித்தளத்திலேயே தனிமனிதனின் வாழ்க்கையையும், சமுதாயத்தின் வாழ்க்கையையும் காட்டுகின்றார். ஏன்? பழந்தமிழ் மரபும் அதுதானே! மனிதன் அடையக்கூடிய பேறுகள் நான்கு என்பது தமிழ்மறை. அவை அறம், பொருள், இன்பம், வீடு