பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 307


தோல்வியின் விளைவாக ஏற்பட்டுள்ள விளைவுகள் மனித சமுதாயத்தின் நல்வாழ்க்கைக்குக் கேடு பயப்பனவாகும். பல்வேறு ஒழுக்கத் தவறுகளைத் தோற்றுவிப்பனவாகவும் அமைந்துள்ளன. அதனாலேயே, செல்வம் உடைய சிலரை எதிர்த்துக் கிளர்ச்சிகளும், புரட்சிகளும் தோன்றின - தோன்றுகின்றன. இந்த அவல நிலை பற்றிய ஆய்வு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே திருக்குறளில் செய்யப் பெற்றுள்ளது. திருவள்ளுவர் ஒரு முற்போக்குக் கருத்துடைய கவிஞர் - பொருளியல் வல்லுநர் - நடைமுறைக்கு இயைந்த சித்தாந்தங்களைக் கண்டு சமூகச் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டவர்.

செல்வம் உடையவராகச் சிலரும், இல்லாராகப் பலரும் இருப்பதற்குத் திருவள்ளுவர் காரணம் கூறுகிறார். அவர் கூறும் காரணம் புதிது - புகழுடையது. உலக அரங்கில் தோன்றிய முற்போக்குக் கருத்துக்கள் அனைத் தினும் ஆன்ற சிறப்புடையது. எனினும் வள்ளுவரை விளக்க வந்தவர்கள் அவர்தம் கருத்துக்கு மாறாக. பழைய பத்தாம்பசலிக் கொள்கைகளையே கூறி, அவருடைய புதுமைக்குத் திரையிட்டனர். இடைக் காலத்தில் செல்வம், ஆதிக்கம் ஆகியவற்றோடு இறுகப் பிணைத்துக் கொண்ட சமயக் கணக்கர்கள் செல்வம் முன்னைத் தவத்தின் பயன், வறுமை முன்னைத் தவமின்மையின் பயன் என்று மயக்க உணர்வோடு கூறி வைத்தனர். அதன் காரணமாகப் பொது மக்களிடத்தும்கூட செல்வம் முன்னைப் புண்ணியத்தின் பயன் - வறுமை பாவத்தின் பயன் என்ற கருத்து வேரூன்றி நிலவியது. திருவள்ளுவரோ, செல்வம் உடைமை புண்ணியத்தின் பயன் அன்று என்பதை உறுதியாக மறுக்கின்றனர். பொருட் செல்வம் பூரியர் கண்ணும் உள என்று கூறுகின்றார். செல்வம் அற்றவர்கள், முயற்சியால் செல்வம் உடையவராக முடியும் என்பதையும் ஒத்துக் கொள்ளுகின்றார். 'பொருளற்றார் பூப்பர் ஒருகால்' என்று