பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 315



அருளும் பொருளும்

மானிட வாழ்க்கை அருள் நலத்தால் சிறக்கவேண்டிய ஒன்று. அருளின்பம் அன்பினால் பெறக்கூடிய ஒன்று. ஒன்றினைப் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் காட்டப் பெறுவது அன்பு. யாதொரு குறிக்கோளுமின்றிக் காட்டப் பெறுவது அருள். இறைவன் உயிர்கள் மாட்டுக் காட்டுவது அருள். உயிர்கள் அருளைப் பெறுவதற்கு இறைவன்பாற் காட்டுவது அன்பு. இதனை,

"...........யாமிரப் பவை
பொன்னும் பொருளும் போகமு மல்ல
அருளும் அன்பும் அறனும் மூன்றும்."

என்று பரிபாடல் குறிப்பிடுகின்றது. இறைவன் உயிர்களுக்கு யாதொன்றும் எதிர்பாராமலே அருள் வழங்குகின்றான். அதனாலேயே அவனுக்குப் பித்தன்' என்று பெயர் வந்தது. "குறியொன்றும் இல்லாத கூத்து” என்று திருவாசகம் பேசுகின்றது.

இறை நெறி நிற்போரும் அருள் நலம் கனிந்தவர்களாக இருப்பர். தேனிலோ, உப்பிலோ ஊறிய பொருள் அவற்றின் சுவையைப் பெறுவதுபோல இறைவனுடைய திருவருளை நினைந்து நினைந்து, அந்த இன்ப அனுபவத்தில் ஊறித் திளைத்தவர்கள் அருள் வசமாகி விடுவார்கள். அவர்களே அந்தணர்கள் - துறவிகள் - சான்றோர்கள் - அருளாளர்கள். இத்தகு சிறப்புடைய வாழ்க்கை எல்லாருக்கும் அமைவதன்று. பலர் அன்புடையராதல் உண்டு. மக்களிடத் திலும், இறைவனிடத்திலும் அன்பு காட்டுவார்கள். அருச்சனை செய்வார்கள். எனினும் இந்த அன்பு, அருள் கருதிச் செய்யப்படுவது அன்று. அவர்களின் நோக்கம் பொருள் ஒன்றுதான். பொருளைக் கவர்வதற்குத் திட்டமிட்டு அன்பு காட்டுவர். அதற்குப் பெயர் அன்பன்று - நடிப்பு,