பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 317


- முரண்பாடன்று. எனினும், பொருளை நாம் அடையும் வழிவகைகளில் நன்றும் தீதும் தோன்றுகின்றன. பிறர் பொருளை விரும்புதலும், வழி தவறிய முறைகளில் பொருள் பெறுதலும் நேரிய வழியாகா.

துறவற இயலில் திருவள்ளுவர் கல்லாமையை வைத்திருக்கிறார். முறை வைப்பு திருவள்ளுவர் வைத்ததா, இல்லையா என்ற ஆராய்ச்சி ஒருபுறம் நடந்து கொண்டிருக் கிறது. அதன் முடிவு எப்படியாயினும், ஆகுக. திருவள்ளுவர் அதிகார முறைவைப்பைச் செய்யாமல் அவருக்குப்பின் வந்தோர் எவரேனும் செய்திருப்பாரேனும் முறை வைப்புக்கும் பொருள்காண வேண்டுமல்லவா? துறவி பொருட் பற்றிலாதவர்; பொருள் தேடும் முயற்சியினின்றும் தன்னை விடுதலை செய்து கொண்டவர். அத்தகைய வாழ்வில் களவுக்கு இடமேது? களவினும் இருவகையுண்டு. வறுமையின் காரணமான ஏற்படும் களவுணர்ச்சி ஒருவகை. பொருள் வந்தடைந்தபின் அதைப் பாதுகாத்துத் தமக்கே அல்லது தம்மைச் சார்ந்த ஒரு சிலருக்கே உரிமையாக்கிக் கொள்ள வேண்டும் என்று தோன்றும் களவுணர்ச்சி பிறிதொரு வகை. இவற்றில் முன்னையது பெருங்குற்றமன்று - மன்னித்தற் குரியது.

துறவிகள் சான்றோராக வாழ்வர். பலருடைய நலனுக்குப் பாதுகாப்பாளராகவும் இருக்க வேண்டியவர்கள். அதன் காரணமாகப் பொது மக்கள் தமது ஆன்ம நலன் உள்ளிட்ட பெருநலனைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டுத் துறவிகளிடம் (தமக்குரியனவற்றை உரிய போழ்து செய்வார் என்று கருதி) நம்பிப் பொருளைக் கொடுத்து வைத்தல் உண்டு. பின்னர், தரையில் ஓடிய நீர், தரையினை ஈரமாக்குதல் போல, தீரத் துறவாதார் கையில் பொருள் புழங்கினாலும், பொருள்வழிப் பற்று அவர்களைச் சாரும்; அதுபோழ்துதான் துறவுடையவர்களைச் சார்புடைய பெருநிறுவனங்கள் தோன்றுகின்றன. நிறுவனங்களின்