பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 321


கொடுத்துக் கொண்டு போகின்றார். திருவள்ளுவர் இந்தக் காட்சியைப் பார்க்கின்றார். நாம் எல்லாம் நினைக்கின்றோம். இந்தச் செல்வர் பெருமகனை வள்ளுவர் பாராட்டுவார் என்று. ஆனால் வள்ளுவர் பாராட்டவில்லை. அச்செல்வப் பெருமான் நோயாளிகளுக்கு அள்ளிக் கொடுத்ததை வள்ளுவர் சடங்காகக் கருதுகிறார். செல்வத்தின் எக்களிப்பு என்று கருதுகின்றார். அல்லது பழக்கத்தின் வழிப்பட்ட செயல் மட்டுமே என்று கருதுகின்றார். அள்ளிக் கொடுத்த செயலுக்கும் நெஞ்சுக்கும் தொடர்பில்லை, என்று வள்ளுவர் கருதுகின்றார். அங்ஙனம் அள்ளிக்கொடுப்பதைவிட அந்த நோயாளிகளின் நோயின் வழிப்பட்ட துன்பு அனுபவத்தைத் தமதாக எண்ணி அனுபவித்து அவதிப்படுவோனை அன்பால் முழுக்காட்டுவதையே அறிவுடைமைக்கு ஏற்ற பயன்படுசெயலென்று வள்ளுவர் கருதுகின்றார். இதனை,

"அறிவினா லாகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை"

(315)

என்று திருக்குறள் விளக்குகிறது.

பகுத்துண்ணாமையும் கொலையே

திருக்குறள் அதிகார அமைப்புகளை உடையது. இந்த அதிகார அமைப்பினைத் திருவள்ளுவரே செய்தார் என்று கருதுவோரும் உண்டு. அங்ங்ணமின்றி இந்த அதிகார முறை வைப்புகள் திருவள்ளுவரால் செய்யப் பெறவில்லை யென்றும், பின் வந்த உரையாசிரியர்கள் செய்தனரென்றும் கூறுவாரும் உண்டு. யார் செய்தால் என்ன? அதிகார அமைப்பிற்கேற்றவாறு திருவள்ளுவர் குறள்களைப் பாடி வைத்தார் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த அதிகார அமைப்பிலும் நிறைந்த பொருளாக்கமிருக்கிறது. பயன் இருக்கிறது. ஒரு செய்தியை ஒரு தடவைக்குப் பத்துத் தடவை

தி.21.