பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

328 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வேறு. தன்னலம் வேறு. எல்லாரும் நலமுடையராகவே வாழவேண்டும். இஃதே இயற்கை. இதுவே பொதுவிதி. இதுவே மனித உலகத்தின் ஒழுக்கமும்கூட நலம் இரு வகையன. தான் படைத்துக் கொள்ளும் இன்ப நலன், பிறர் படைத்து வழங்கும் இன்ப நலன். தான் படைத்துக் கொள்ளும் நலன்களாவன; அறிவு, அன்பு, ஆள்வினைத் திறன் முதலியனவாம். பிறர் வழங்கும் நலன்களாவன, தான் பேணப்படுதலும் போற்றப்படுதலுமாம். தன்னைத்தானே பேணிக் கொள்வதையிடப் பேணப்படல் சிறப்பாகும். தன்னலம் என்பது பிறருக்கு நலமின்மை விளைத்துத் தனக்கு வருகிற நலனே தன்னலம் என்று கூறப்பெறும். தன்னிடமுள்ள தன்னலச் சார்பினையறிந்து அச்சார்பு கெடவும் பிறர் நலம் பேணும் சார்பு பற்றி நின்று ஒழுகவும் எல்லோரும் முயன்றால் தனிமையிலும் துன்பமில்லை. பொதுவிலும் துன்பமில்லை; எங்கும் இன்பம். எல்லோருக்கும்.இன்பம். எப்பொழுதும் இன்பம். இதனை,

"சார்புணர்ந்து சார்பு கெடலொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரும் நோய்"

(359)

என்று திருக்குறள் கூறுகிறது.

இருவேறு உலகத்து இயற்கை

ந்த உலகில் அறிவுடையவர்கள் பலர் ஏழைகளாக இருக்கிறார்கள். அறிவில்லாதவர்கள் சிலர் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். இஃது உலகியலின் நியதி ஆகாது; நீதியும் ஆகாது. முறைகேடான ஓர் அமைப்பை - முறையை நியாயத் தன்மைப்படுத்துவது அநீதியேயாகும். வாழும் மனித உலகிற்கு அறம் பேசவந்த வள்ளுவர் மனித உலகத்தின் நலனையே நியாயமெனக் கருதுகிறார்; நீதி என்று கருதுகிறார். வழக்கில் பொய்மையாக இருந்தாலும் மனித உலகம் தீதற்ற