பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 333


கொள்வதாகும். சிறப்புக் கல்வி என்பது தன் தகுதியினை மேலும் உயர்த்திக் கொள்ளக் கற்பதாகும்.

ஒருவர்க்கு உடலில் நலமில்லையானால் மருத்துவரிடம் உடலைக் காட்டிச் சோதனை செய்தல் வேண்டும். மருத்துவர் உடலைச் சோதனை செய்து நோயுற்ற உடம்பினில் இன்னின்ன உயிர்ச்சத்து இல்லையென்று குறிப்பிடுவர். இல்லாத உயிர்ச்சத்தைப் பெறக்கூடிய உணவை - மருந்தைத் தேடியுண்டு இன்மையை ஈடு செய்து கொள்வது இயல்பு. அது போலவே நம்முடைய உயிரியலில் சில தகுதிக் குறைபாடுகள் இயல்பிலேயே உண்டு. அந்தத் தகுதிக் குறைபாடுகள் என்ன என்பதை நாமே நம்முடைய நேற்றைய வாழ்க்கையின் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். அல்லது நமது வாழ்க்கையில் நெருங்கிய தொடர்புடைய பெற்றோர், ஆசிரியர், நண்பர் ஆகியோர் மூலமாவது எந்தவகையில் நாம் தகுதிக் குறைபாடுடையோம் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். இங்ஙனம் தெரிந்து கொண்ட பிறகு நம்முடைய உயிர்த் தகுதிக் குறைபாட்டை நீக்கி நிறை நலத்தை வழங்கக் கூடிய இலக்கியங்களை - கருத்துக்களைக் கற்றுத் தகுதியுடையவராக ஆக்கிக் கொள்ள வேண்டும். இதனை,

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக"

(397)

என்ற குறளால் அறியலாம்.

இந்தக் குறளை, "கசடறக் கற்பவை கற்க" என்றும் "கசடறக் கற்க" என்றும் "கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக" வென்றும் பிரித்துப் பொருள் கொள்ளவேண்டும். நம்முடைய மனக்குற்றம் இன்னதென்பதை அறிந்து கொண்டு அதனை நீக்குதற்குரிய நூல்களாகத் தேர்ந்தெடுத்துக் கற்க வேண்டும். எகிப்தியப் பழமொழி ஒன்று உண்டு. "நல்ல நூல்கள் உயிர்க்கு மருந்து போல்வன” என்பது அது. குற்றம்