பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 341



பொதுவாக இன்று ஒரு அரசு மிகமிகச் சாதாரணமான காவல் உத்தியோகத்தையே வகிக்கிறது. ஆனால் அரசினுடைய பொறுப்போ தன் குடிமகனுடைய அறிவைத் தொட்டுத் துாண்டி வளர்ப்பது; ஆள்வினையாற்றலை வளர்ப்பது: ஒழுக்க நெறியில் நிறுத்துவது. என்னுடைய தேவைகளை நான்பெற என்னை முறையான வழியில் வழி நடத்துவது. பெற வேண்டுவனவற்றைப் பெற்று வாழத்துணை நின்று பாதுகாப்பது. இவ்வளவும் அரசின் பொறுப்பு. இத்தகைய எந்தவொரு பொறுப்பினின்றும் அரசு நழுவினால் மக்கள் மன்றத்தில் குற்றம் மலியும். குற்றத்தைக் கூறிப் பயனில்லை. அரசு குற்றமுடையதாக இருந்து கொண்டு மக்களுக்குத் தண்டனை வழங்குவது அறநெறியும் அன்று. அதனாலேயே தன் குற்றம் கண்டு தன்னுயிர் தந்தனன் பாண்டியன் நெடுஞ்செழியன். கோவலனிடத்தில் குற்ற மில்லை. பாண்டியனிடத்திலிருந்த குற்றம் கோவல னிடத்தில் குற்றத்தை உண்டாக்கியது என்பதையும் அடியிற் கண்ட குறளையும் இணைத்து நோக்கினால் தமிழர் அரசியலின் விழுமிய சிறப்புக்கள் விளங்கும்.

"தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு"

(436)

என்பது திருக்குறள்.

ஊழா? முயற்சியா?

'ழ் சர்வ சக்தி படைத்தது; அதை எதிர்த்து மனிதனால் ஒன்றும் செய்ய முடியாது; மனித ஆற்றலைவிட ஊழின் ஆற்றலே வலிமை படைத்தது என்றெல்லாம் கருத்துக்கள் நிலவிய காலத்தில் திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.