பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

344 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முயற்சியே வலிமையுடையது என்று கருதி முயற்சியுடைய வாழ்க்கையில் ஈடுபடுவோமாக!

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்!
சிரித்திடுக! சிந்தனை செய்க!

திருவள்ளுவர் வாழ்க்கையின் மாளிகையை முறையாக முழுதுறக் கட்டி முடிப்பதற்கு உரிய வழிவகைகளைக் கண்டவர். இன்ப மாளிகை அமைப்பதற்கு முன்பு துன்பம் உறவருதல் இயற்கை துன்பத்தில் துவளுதல் கூடாது. துன்பம் வந்துற்ற பொழுது என்ன செய்யவேண்டும்? என்பதைத் திருவள்ளுவர் தெளிவாகக் கூறுகிறார். இதனை,


"இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்துரர்வ தஃதொப்ப தில்."

(621)


என்று கூறுகிறார்.

துன்பம் வந்துற்ற பொழுது சிரித்திடுக. துன்பம் தொலைந்து அதனை அடுத்து இன்பம் வரும் என்பது வெளிப்படையான கருத்து. ஆனால், வெளிப்படையாகச் சொல்லப்படும் கருத்து திருக்குறளின் மாண்புக்கு இயைந்ததன்று. துன்பத்தைப் பார்த்துச் சிரித்தால் துன்பம் போகாது. அதோடு இங்குச் சிரித்தல் என்று மட்டும் பொருள்கொள்ள முடியாது. சிரிப்பில் பலவகையுண்டு. இங்குக் குறிப்பிடப் பெறும் சிரிப்பு "நகுதல்” ஆகும். அதாவது பரிகாசச் சிரிப்பு. துன்பம் காரியம்; காரியமிருந்தால் அதற்கொரு காரணமுண்டு. துன்பத்திற்குரிய காரணம் நம்முடைய அறியாமை; செயமாட்டாமை. ஆள்வினையின்மை ஆகியவையேயாம். தன்னுடைய குறைகளை நினைத்துத் தன்னைத் தானே நொந்து சிரித்து விமர்சனம் செய்து கொண்டால், காரணங்கள் நீங்கும். அவ்வழி துன்பம்