பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 345


தொலையும்; இன்பம் பெருகும். பொதுவாக ஏதாவது ஒரு துன்பம் வந்தபொழுது தலையிலடித்துக் கொண்டு அழுவது வழக்கம். தலையில் அடித்துக்கொள்ளும் வழக்கம் எப்படி யேற்பட்டதென்றால், தலைக்குள் இருக்கிற புத்தி வேலை செய்யாததால் துன்பம் வந்திருக்கிறதென்பதை உணர்ந்து புத்தி இயங்காமல் தேங்கிக் கிடப்பதைத் தெரிவிக்கத் தலையிலடித்துக்கொள்ளும் வழக்கம் வந்தது. இப்பொழுது பலர் தலையில் அடித்துக்கொண்டாலும் உள்ளே இருக்கும் புத்தி சற்றேனும் அசைந்து இயங்குவதாகத் தெரியவில்லை. ஆதலால், துன்பம் இயற்கையென்றோ, தலைவிதியென்றோ நம்பி வாளாகிடத்தல் கூடாது. துன்பத்திற்குரிய காரணங் களை அறிந்து மாற்ற வேண்டும். அதோடு, துன்பத்தை வெற்றுக் கவலையாக்கி வாழ்க்கையைச் சுமையாக்கிக் கொள்ளுதலும் கூடாது.

துன்பம் வந்தவுடன் தட்டிக்கழிக்காமல் ஏற்று அனுபவித்துக்கொண்டும் அந்த அனுபவத்தை ஆசிரியனாகக் கொண்டும் நேற்றைய தவறுகளுக்குரிய காரணங்களை மாற்றியும் புத்துணர்வோடு வாழக் கற்றுக்கொள்ளவேண்டும். அதுவே வாழ்க்கை இன்பமாவதற்கு உரிய சிறந்த வழி.

அமைச்சுப் பண்பு

திருவள்ளுவர் ஒரு சிறந்த அரசியல் அறிஞர். அலை கடலனைய அவாக்களால் அலைமோதி ஒருவருக்கொருவர் பொருதிக் கொள்ளும் இயல்புடைய மனித சமூகத்தை நெறிப்படுத்துதல் எளியதொன்றன்று. அதுவும் செப்பமடை யாத சமூக அமைப்பு நிலைபெற்றிருக்கும் பொழுது மனித சமூகத்தை நெறிப்படுத்துதல் மேலும் கடுமையானதாக அமைகின்றது. நோய், நோய்க்கு மருந்தாதல் இயலாது. அதுபோலவே, ஆற்றலிலும், அரிய பண்புகளிலும், சீலத்திலும்