பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 31


உருவாக்கப்பெறும். இப்போதுள்ளதைப் போல, ஆதிக்கப் போட்டிகளாலும் கோபதாபங்களாலும் அரசியற் கட்சிகள் தோன்ற இயலாது.

திருக்குறள் சமுதாய அமைப்பில் குறிக்கோளற்ற அரசியற் கட்சிகள் தோன்ற அனுமதிக்கப்பட மாட்டா. திருக்குறள் வழி தோன்றும் அரசியற்கட்சிகளைச் சார்ந்தவர்கள் மனித நேயம், சுயக்கட்டுப்பாடு, கடுமையாக உழைத்தல், சலத்தால் பொருள் செய்யும் விருப்பின்மை, எளிமை, தனக்கென முயலாது பிறர்க்கென முயலும் நோன்பு ஆகிய தகுதிகளைப் பெற்று விளங்குவர்; பெற்று விளங்கச் செய்வர்.

நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் ஆகியன "அளவிறந்த பெரும்பான்மை" பெற்ற ஒரே காரணத்திற்காகச் சிறுபான்மையினர் கருத்து மதிக்கப் பெறாதிருக்க அனுமதிக்க மாட்டா; கருத்தின் பயன்பாடு நோக்கி எடுத்துக் கொள்ளும். பொதுமைக்கு இடையூறில்லாத வகையில் தனி ஒருவரின் சுதந்திரம் மதிக்கப் பெறும். ஒப்புறுதி வழங்கப் பெறும். தனி ஒருவரின் சுதந்திரத்தை அங்கீகரிப்பதன் மூலமே சமுதாயத்தின் பொதுக்கடமை நிகழ்வுறும். "பொதுமைக்கு ஊறில்லாத தனிமனித உரிமைகள்" என்ற கோட்பாடு உறுதியாக நடைமுறைப்படுத்தப் பெறும். பெரும்பான்மையின் காரணமாகத் தோன்றும் முரட்டுத் தனத்திற்குத் திருக்குறளின் குடியாட்சிமுறை கடிவாளமாக அமையும்; எந்த ஒரு கருத்தும் அலட்சியப்படுத்தப்பட மாட்டாது. கருத்து வேற்றுமைகள் காழ்ப்பாகவும் பகைமையாகவும் வளர இடமளிக்கப் பெறமாட்டா குற்றம் சுமத்துதல், பழி துாற்றுதல் போன்றவைகள் திருக்குறள் நெறியில் சிறுமை என்று புறக்கணிக்கப் பெறும்; விதிமுறைகளாலும் கட்டுப்படுத்தப் பெறும். ஆனால் பயனுடைய விமர்சனங்கள் வரவேற்கப் பெறும்; ஊக்குவிக்கப் பெறும்.

திருக்குறள் காட்டும் ஆட்சியில் அரசுக்கும் மக்களுக்கு மிடையேயுள்ள இடைவெளி குறையும். திருக்குறளரசு