பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

346 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தொய்வுள்ளவர்கள் நொய்ந்து கிடக்கும் சமுதாயத்தை நடைமுறைப்படுத்துதல் ஒரு பொழுதும் சாலாது. சிலபொழுது அடக்குமுறையால் - அச்சத்தால் அல்லது வரம்பிகந்த முறைகேடான கொடைகளால் - அரசு எந்திரம் ஓடலாம். ஆனாலும் அந்த ஓட்டம் நிலையானதுமன்று நெடிது நிற்பதுமன்று; சேம வைப்பிற்குரியது மன்று. மன்னராட்சிக் காலத்தில் மன்னருக்குச் செவியாகவும், கண்ணாகவும், கைகளாகவும் உடனிருந்து வழி நடத்தும் அமைச்சர்களே யிருந்தனர். இந்த மக்களாட்சித் தலைமுறையில் அமைச்சர்களே ஆளுநர். அமைச்சர்களுக்கு வேண்டிய சிறந்த தகுதிகளைத் திருவள்ளுவர் முறைப்படுத்திக் கூறுகிறார்.

வினை செய்தல் எளியதன்று. வினை செய்தல் இலட்சிய நோக்காக - அமையவேண்டும். இடையீடுகளில் திறனிழந்து நிற்றல் கூடாது. வினை செய்யும் ஆற்றலை ஐம்பொறிகளிலும் புலன்களிலும் உருவாக்கித் தேக்கிப் பயனுறத் தக்க வகையில் வளர்த்து, வினைவல்லாராக விளங்குதல் வேண்டும். வினையின் கண் இவர்க்குரிய வல்லமையை அவர் எடுத்துக் கூறி அறிமுகம் செய்துகொள்ளக் கூடியதாக அன்றி அவர் செய்த வினையின் பயனாக விளைந்த பயனும், சாதனையும் இவர் வினைவல்லார் என்பதைப் பறைசாற்ற வேண்டும்.

அமைச்சு ஒரு தொழில். பொறுப்புள்ள பணி. அவர்களின் கடமை குடிமக்களைக் காத்தல். அகத்தாலும் புறத்தாலும் குடிமக்கள் கேடுறாவண்ணம் பாதுகாக்கப் பெறவேண்டும். காத்தல் என்பதனால், காவல் என்ற பொருள் மட்டும் கொள்ளக்கூடாது. அஃது ஒரு பொருள் பொதிந்த சொல். பல நோக்குப் பொருள் பொதிந்த சொல். குடிமக்கள் முறையாக அகத்தாலும் புறத்தாலும் வளர வேண்டிய அளவுக்கு வளரத் துணை நிற்றலும் அமைச்சின் கடமை - ஏன்? இந்த உலகத்திற்கு அப்பாற்பட்டு விளங்கும் இறைவனுடைய உயர்நீதிமன்றத்திற்கு எந்த ஓர் உயிரும்