பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

348 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வேண்டும். ஆக, அஞ்சாமையும் குடிப்பிறப் பிறப்பும் காக்குந் திறனும் கற்றறிந்த அறிவும் முயற்சியும் - ஆகிய இந்த ஐவகைப் பண்புகளும் அமைச்சரின் ஐம்புலன்களிலும் - ஐம்பொறிகளிலும் நிறைந்து நிலைபெற்றிருக்கவேண்டும். ஒருபொறி, சிறந்த பண்பிலீடுபட்டுப் பிறிதொருபொறி அதற்குத் தடையாக இருக்குமானால், செயற்பாட்டில் ஒருமை நிலவாது. செயலும் செப்பமாக அமையாது; பயனும் கிடைக்காது. ஆதலால் இந்தச் சிறந்த பண்புகள் ஐம்பொறிகளிலும் பெற்றிருக்கவேண்டும் என்று உரை கானுதலே சிறப்பு.

"வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு”

(632)

என்பது குறள்.

தாழ்விலாச் செல்வர்


திருவள்ளுவர் அறநெறியாளர்; அரசியலறிஞர்; பொருளியல் மேதை சமுதாய இயல் அறிந்து இலக்கியம் படைத்த வல்லாளர். நாடு, மக்கள், அரசியல், சமுதாய அமைப்பு ஆகிய துறைகளில், அரிஸ்டாட்டில், பிளேட்டோ, ரூஸோ, கார்ல் மார்க்ஸ் ஆகிய பேரறிஞர்கள் வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர். ஏன்? அவர்களிலும் காலத்தால் முந்தித் தோன்றிய மூத்த அறிஞர் திருவள்ளுவர். இவர் இயற்றிய திருக்குறளை இலக்கியத் திறனாய்வு செய்தால் மட்டும்போதாது. சமுதாய இயல் ஒழுகலாற்றுத் துறையில் திறனாய்வு செய்தல் வேண்டும். அங்ங்னம் திறனாய்வு செய்யும்பொழுது, திருவள்ளுவர் காலத்தால் முந்தியவர் மட்டுமல்லர் கருத்தாலும் மூத்தவர்; மிகமிக முற்போக்கானதொரு கருத்துலகைச் சார்ந்தவர் என்ப புலனாகும்.