பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 355


அரசு வெளியிட முடியும். பொருளின் மதிப்பைத் தாங்கி வருகின்ற ஒரு சின்னமே நாணயம். பொருளின்றிச் சின்னம் இருப்பின் மதிப்பிராது.

பழங்காலத் தமிழ் இலக்கியங்களிலும்கூட பொன் வேறு, பொருள் வேறு என்று பகுத்துப் பிரித்தே பேசப்பட்டு வந்திருக்கிறது. பரிபாடல் பொன் பொருள் போகம் என்று முறை வைத்துப் பேசுகின்றது.

மக்களினத்தில் சுலபமான பொருள் கொடுக்கல் வாங்கலுக்காக (பரிவர்த்தனைக்காக) நாணயமாற்று முறை வந்ததேயொழிய நாணயத்தின் செல்வாக்குப் பெருகுவதற்காக அன்று. ஆனால் சாதாரண மக்களிடத்தில் நாணயத்திற்கு மதிப்புக் கூடி, பொருளுக்கு மதிப்புக் குறைந்து விட்டது. ரூ. 1000 பெருமதிப்புடைய மாடுகள் வைத்திருப்பவனை நாடு மதிப்பதில்லை. ஆனால் ஒரு தங்க மோதிரம் போட்டவனை நாடு மதிக்கிறது. 40 ரூபாய் விலை மதிப்புள்ள நெல்லை, அணிலும் எலியும் தின்ன, போதிய பாதுகாப்பின்றி வெளியில் போட்டிருக்கிறான். ஆனால் 25 பைசா நாணயத்தைத் துணியில் முடிந்து, பெட்டியில் பூட்டிப் பத்திரப்படுத்துகின்றான். மக்கள் இப்படியிருந்ததால் ஆட்சியாளர் வரிகள் மூலம் நாணயம் திரட்டிக் குவித்தனர். இப்படி நாணயத்தின் மதிப்புப் பெருகியதால் பொருள் செய்யும் விருப்புக் குறைந்து பணம் சம்பாதிக்கும் ஆசை பெருகியது. அதனால் மறைமுகமான சுரண்டல் முறைச் சமுதாயம் தோன்றியது. வட்டித் தொழில், வாணிகம் போன்ற அதிக உழைப்புத் தேவையில்லாத - உற்பத்திக்கே தொடர்பில்லாத - குறுகிய வழி முறைகளில் அல்லது இரவு முதலிய இழிவான வழிகளில் பணத்தை அடைய முயலும் எண்ணம் வளர்ந்தது. நாட்டின் பொருள் வளம் சீர்குலைந்தது. வறுமை பெருகியது. இதனையுணர்ந்த திருவள்ளுவர் பணத்தின் மீது இருக்கும் ஆசையைப் பொருள் உற்பத்தியின் மீது திருப்ப விரும்புகிறார். நாட்டின் முதல் மனிதனாகிய அரசனைப்