பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எப்பொழுதோ ஒரு தடவை பயன்படுத்துவதற்குரிய அதிகாரங்களை மட்டுமே பெற்றிருக்கும். அரசின் அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பெற்று, ஆங்காங்கு ஆட்சி உறுப்புக்களாகிய ஊராட்சி, நகராட்சி, கூட்டுறவு அமைப்பு முதலிய பல்வேறு அமைப்புகளைக் கண்டு, ஆங்காங்கு உரிமைகளும் அதிகாரங்களும் பரவலாக்கப்பெறும். இன்று இருப்பதைப் போல் அரசு, மக்களைத் தாங்காது; மக்கள் தாம் வளர்வது மட்டுமின்றி அரசைத் தாங்கும் ஆற்றலாக விளங்கி, அரசின் பொறுப்புக்களை ஏற்பார்கள்; அரசை இயக்குவார்கள்.

மக்கள் வாழ்வுக்கும் அரசுக்கும் பொருளே அடிப்படை திருக்குறள் காட்டும் பொருளியல் நுட்பமானது. திருக்குறள் தனியுடைமைச் சமுதாயத்தை மறுப்பதன்று; ஆயினும், தனியுடைமைக்குச் சில அறநெறிகளை - விதிகளை விதிக்கிறது.

1. "வெஃகாமை வேண்டும் பிறன் கைப்பொருள்"

(178)

2. "பழிமலைந்து எய்திய ஆக்கம்"

(657)

3. "தாழ்விலாச் செல்வர்"

(731)

4. "தீதின்றி வந்த பொருள்"

(754)

ஆகிய தொடர்கள் தாம் உழைக்காது உழைப்பவரின் பங்கைத் திருடிச் சேர்க்கும் செல்வத்தின் மதிப்பின்மையையும், அச்செல்வமுடையாரின் மதிப்பின்மையையும் கூறுவதுடன் இவற்றின் எதிர்மறைகளையும் கூறுவதாக அமைந்துள்ளமையைத் திருக்குறட் சமுதாயம் உய்த்துணர்ந்து நெறிப்படுத்தும். "பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல்", "இரப்பின் கரப்பார் இரவன்மின்" என்று வரும் தொடர்கள் ஒப்புரவு நெறி மேற்கொண்டு ஒழுகுதலைக் கூறி நெறிப்படுத்தும் மாட்சிமையை உணர்க. ஆயினும் கடந்த கால வரலாற்றுப் போக்கைக் கூர்ந்து நோக்கினால், எந்தத் தனியுடைமை யாளரும் எந்த நெறிமுறையையும்