பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

356 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பார்த்துக் கேட்கிறார் - இல்லை - கோபக் குறியுடன் ஆணையிடுகிறார். வரி - வரி என்று நாணயங்களை வாங்கிக் குவிப்பதற்குப் பதிலாக, அயல் நாடுகளிலிருந்தெல்லாம் செல்வத்தைக் கொண்டு வருவதற்குக் காரணமான - அவர்கள் விரும்பும் பொருள்களைச் செய்க! அவ்வழி நாட்டை நடத்துக என்று ஆணையிடுகின்றார். அப்பொழுது பகையொடுங்கும்! பார் செழிக்கும்!

"செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்" (759)

சோரவிடுக!

ருவன் எத்தனையோ - எண்ணிக் காண முடியாத அருஞ் செயல்களைச் செய்ய மண்ணில் பிறந்தான். மக்கள் வாழ்க்கையே செயல் முடித்தலின் பாற்பட்டது. நற்செயலைச் செய்வதற்கே உயிர் வாழ வேண்டும். அழிவறிந்த ஆள்வினையும் செயலுமற்ற வாழ்க்கை வாழ்க்கையாமோ? கறங்கெனச் சுற்றும் கால தேவதையின் சுழலிற்பட்டு அழியும் வாழ்க்கை அவல வாழ்க்கை. இந்த வாழ்க்கையுடையவர்கள் உண்பதும் கேடு உண்டு நடமாடித் திரிவதும் கேடு; இங்ஙனம், செயல் நிறைந்த வாழ்க்கையை மேற்கொள்ளவே ஒருவன் இன்னொருவனோடு உறவு கொள்ளுகிறான். இந்தப் பழக்கம் எந்த வகையில் அமைந்தாலும் - குருதி வழிப்பட்ட உறவானாலும் - தொழில் வழிப்பட்ட அலுவல் முறையானாலும் - அல்லது இவ்விரண்டினும் வளர்ந்து மேம்பட்டதாகக் கருதப்பெறும் நட்பாயினும் அல்லது காதல் வழிப்பட்ட வாழ்க்கைத் துணையானாலும் எல்லாமே, ஒருவர் தாம் எண்ணிய கருமம் செய்து முடிக்க பெறுந்துணையேயாம். ஒரு வகையில் நட்பேயாகும். இந்த மனப்போக்கில் இன்றைய சமுதாயத்தில் சிலர் இணைந்து வாழும் இயல்புகளை ஆராய்ந்தால் வேதனையே மிகும்.