பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 357


ஆங்கு, அந்த இணைப்பிலும் உறவிலும், குறிக்கோள் வேட்கை இல்லை. செயல் பற்றிய எண்ணமே இல்லை. பெரும்பாலும் வயிற்றுப் பிழைப்பைக் குறியாக வைத்தே நடைபெறுகின்றன. ஒரு பகுதி செல்வாக்குப் பெறும் நோக்கத்துடன் நடைபெறுகிறது. பிறிதொரு பகுதி யாதும் குறியற்ற இன்பப்பொழுது போக்காக அமைந்துவிடுகிறது. இந்த அடிப்படைகளில் ஏற்படும் உறவுகளினாலோ, நட்புகளினாலோ யாதொரு பயனுமில்லை. இத்தகைய நட்பு - காதல் உறவில் வீணாகும். காலமும் பொருளும், வெற்றடுப்பில் விறகெரித்தது போலாகும். அப்படியெரித்தாலும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அணைத்தால் கரியாவது கிடைக்கும். இந்த உறவில் எதுவுமில்லை. இங்ஙனம் வீணாகும் உறவில் கூடி வாழ்வோரை வீடுகள்தோறும் பார்க்கிறோம்; மடங்கள்தோறும் பார்க்கிறோம்; தெருக்கோடிகளில் பார்க்கிறோம்; திண்ணைகளில் பார்க்கிறோம்; மன்ற மனைகளில் பார்க்கிறோம்; எங்கெங்கோ பார்க்கிறோம்!

இன்று எந்த ஒருவனும் தனித்திருப்பதில்லை. இந்த உயரிய பேராற்றலை மாந்தன் இழந்து எத்தனையோ நாளாயின. கூடிக் கூடிக் குலவுகின்றார்கள்; குழைகிறார்கள்; சிரித்துப் பேசுகிறார்கள்; என்னென்னவோ வேலை செய்வது போலக் கைகளும் வேலை செய்கின்றன. ஆனால் விளைந்த பயனோ, அம்மம்ம! நம்மைச் சூழ்ந்துள்ள வறுமையேயாம். வளத்தில் மட்டும் வறுமையன்று. அன்பிலும் வறுமை ஏற்பட்டிருக்கிறது! ஆதலாலன்றோ பலநாள் பழகிய பின்பும் பகைமை கால் கொள்கிறது; வஞ்சினம் மேலிடுகிறது; வாழ்க்கை சூறையாடப்படுகிறது. இத்தகு இயல்புகள் நிறைந்த மாந்தர் வாழ்க்கை - இல்லை! இல்லை! விலங்கு வாழ்க்கை மன்னிக்க முடியாத ஒன்று.

இப்படியெல்லாம் அழிவதற்கு எல்லோரும் செய்யத் தெரியாதவர்களா? அல்லது செய்யத்தான் முடியாதவர்களா? மக்களால் முடியாததொன்றும் உண்டோ?