பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 359


என்பது குறள். திருவள்ளுவர் தெளிவாகத் தொடங்குகின்றார். "ஒல்லும் கருமம்" என்று குறிப்பிடுகிறார். அதாவது அவர்கள் செய்து முடிக்கக்கூடிய கருமம் என்றே கூறுகிறார்; ஆனால் அவர்களுக்கோ மனமில்லை. தம் வலிமையை எளிமையாக்குகிறார். ஊதியம், பெருமை, பரிசு ஆகியன பெறுங்காலத்தில் தம்மை உயர்வுடையோராக்கிக் காட்டமுயலுபவர் கருமத்தின் முன்னே அதைச் செய்ய விருப்பமின்றி - கருமத்தைச் செய்யாது - சோம்பலைச் செய்தலினாலே அந்தச் சூழ்நிலையிலும் தன்னுடைய பொய்ப்பெருமையை வீழாது காக்க விரும்பிக் கருமத்தைக் கடுமையானதாக்குகிறார். எளிதில் முடியக்கூடிய ஒன்றை - முடியக்கூடாத ஒரு பெரிய காரியமாக முயன்று ஆக்குகிறார். அற்பக் கடமைகள் மலையென ஆக்கப்படுகின்றன. மலையணைய மாந்தன் அற்பமாகின்றான். கேட்பவர் மனங்குழம்பச் சிக்கல் இல்லாத கருமத்தைச் சிக்கலுடையதாக்கி "இது என்றும் . அது என்றும்" போட்டு உழப்பி, மயக்கமடையச் செய்கின்றனர். இத்தகையோர் நட்பைப் பெறற்க! அவரிடம் அத்தவறுகள் குறித்துப் பேசவேண்டா என்று ஆணையிடுகிறார் வள்ளுவர். ஏனெனில் எத்தனை தடவைதான் அறியச் சொன்னாலும், அவர்கள் அதுபோது அறிந்து கொண்டதுபோலத் தோன்றினும் பின்னும் அதை மறந்து தம் இயல்பிலேயே செல்வர். நட்பாய் ஒழுகுவர். ஆயினும் நட்பாய் விளங்க மாட்டார்கள். எடுத்து சொல்லித் திருத்த முயற்சி செய்வதன் மூலம் நாம் அந்த நட்பை இழக்க முடியாத ஒரு இக்கட்டான நிலைக்கு ஆளாகிறோம். காரணம், பாசம் வேர்விடும். பயனற்ற நட்பில் - உறவில் பாசம் வேர்விடுதல் நம்முடைய ஆற்றலையும் ஆக்கத்தையும் கெடுக்கும். ஆதலால், அத்தகையோர் நட்பை - உறவை ஒரு காலைக்கு ஒரு காலையாக ஓயவிட்டுப் பைய விலகிக்கொள்க! என்று கற்றுக் கொடுக்கிறார். நட்பு - உறவு என்ற ஒன்று உடனடியாக முறிதல் இயல்பன்றானமையின்