பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

360 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


'சோரவிடுக' என்கிறார். பழகிய நட்பை - உறவை விலக்கவும் பலநாள் பிடிக்கும் என்பது பெறப்படுகிறது. இங்ஙனம் இந்தத் தெளிந்த வாழ்வியலை வடித்துத் தரும் வள்ளுவரின் பெருமை நினைந்து இன்புறத் தக்கது.

நிலமும் உரிமையும்

னித சமுதாய அமைப்பில் நிலவுடைமைச் சமுதாய அமைப்புத் தோன்றி ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாயிற்று. வேறு உடைமைகள் உணர்வும், அறிவும் தோன்றுதற்கு முன்னே தோன்றியது நிலவுடைமைச் சமுதாய அமைப்பு. தொடக்கத்தில் உழைப்பின் வழியாகவே உரிமையும் கிடைத்திருக்கக்கூடும். காலப்போக்கில் உரிமையும், உழைப்பும் வேறுபட்டன ஆயின. உழைப்பாரிடத்தில் உரிமையிருப்பதில்லை - உரிமையுடையார் உழைப்பதில்லை என்ற நிலைமை தோன்றிற்று. திருவள்ளுவர் காலத்தில் உரிமையும் உழைப்பும் பிரிக்கப்பெறவில்லை. உழைப்பாளரிடத்திலேயே நிலத்தின் உரிமையும் இருந்திருக்கிறது. நிலத்திற்கு உரிமையுடையவனைக் "கிழவன்" என்று திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார். உழவு என்ற அதிகாரத்தில் உழவனைப் பற்றிப் பேசுகிறார். உழவனே உழுதுண்டு வாழ்கிறான். மற்றவர்கள் தொழுது பின் செல்கிறார்கள் என்று வள்ளுவர் கூறுகிறார். உழாதவன், அதாவது உழைக்காதவன் உண்பதற்கும் உரிமையில்லாதவன். ஆயினும் தொழுது இரந்து செல்வதால் உழைக்காதவனுக்கும் பிழைப்பு நடக்கிறது.

வள்ளுவர், உழவனை - உழைத்து உற்பத்தி செய்பவனைப் புகழ்ந்து பாராட்டுகின்றார். உழைக்காதவனை எள்ளி நகையாடுகிறார். "நிலமென்னும் நல்லாள் நகும்" என்று கூறி நகைக்கின்றார். இங்ஙனம், உழுபவனை உயர்த்திய திருவள்ளுவர், அவனையே நிலத்திற்குரிய கிழவனாகக் கருதி