பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 363


இருந்து வாழ்ந்தார்கள். பொதுமகளிர் வழக்கு மிகப் பிற்காலத்திலேயே தமிழ்ச் சமுதாயத்தில் கால்கொண்டது. ஒருத்தி பலருக்குப் பெண்டாக இருக்கலாம் என்ற இதிகாச மரபு தமிழகத்திற்கு வந்த பிறகே பொதுமகளிர் தோன்றியிருக்கவேண்டும். அதற்குச் சான்று, பரத்தையர் குலத்தைச் சார்ந்த மாதவி, சமூகப் பழக்கத்தால் மனைவியாக வாழவில்லையே தவிர, ஒரு சிறந்த மனைவியாகவே கடமையைச் செய்திருக்கிறாள். அந்த வகையில் கண்ணகியையும் மாதவி விஞ்சியிருக்கிறாள். தென்றல் போலத் திரிந்த கோவலனைத் தன் வழிப்படுத்தியிருக்கிறாள். அதாவது தன்னைத் தவிர, வேறொரு பெண்ணை நாடச் செய்யாது செய்திருக்கிறாள். மாதவியைப் பிரிந்தவுடனும், வேறொரு பரத்தையை நாடாமல் கண்ணகியை நாடிவரச் செய்திருக்கிறாள். இந்த இடைக்காலத்தில் கோவலனை, மாதவி செழுமையுற வளர்த்திருக்கிறாள் என்பதை யார் மறுக்க முடியும்?

ஆதலால், கணவன் மனைவி உறவு பெண்ணைப் பொறுத்த வரையில் ஒருவனேதான். அதனாலேயே அவனைப் பிரிந்துழி பரிவும் புலம்பலும் ஏற்படுகிறது. பெண்ணுக்கும் பலராக ஆகுமானால் பிரிவுமில்லை, பரிவுமில்லை. கணவனைப் பிரிந்த காரிகையின் பரிவு நிறைந்த புலம்பலை, ஒருவன் ஒருத்தி என்ற மரபு வழிப்பட்ட இராமகாதையில் பார்க்கமுடிகிறது. இராமனைப் பிரிந்த சீதையின் பிரிவுக்கு - வருத்தத்திற்கு இணையேது, ஈடேது? அத்தகைய ஒரு பரிவையும் வருத்தத்தையும் நாம் பாஞ்சாலியிடத்துப் பார்க்கமுடியவில்லை.

நிலத்திற்கு உரியவன் நாள்தோறும் நிலத்திற்குச் செல்லாது போனால் - கடமையின் காரணமாக வெளியிற்சென்ற கணவன் உரியபொழுது, வீட்டிற்கு வராது போனால் - கணவனிடத்தில் மனைவி புலத்தலைப் போல நிலமகளும் ஊடிப் பிணக்குக் கொள்ளும் என்று வள்ளுவர் கூறுகிறார்.