பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 365


செல்வத்தைப் போற்றவேண்டும். தேவைப்பட்டியல் பெருகினாலும் வறுமை வந்தடையும். ஊரைப் பார்த்தோ, நாட்டைப் பார்த்தோ நம்முடைய தேவையை உறுதி செய்துகொள்ள முடியாது. நம்முடைய தேவையை நிர்ணயிப்பதற்கு நம்முடைய உழைப்புத்திறனும், அவ்வழி படைக்கும் படைப்புமே மையமாக இருக்கவேண்டும்.

இரந்தோ, கையூட்டு வாங்கியோ, கடன் பெற்றோ அரிசிச்சோறு சாப்பிடுவதிலும் உழைத்து கேழ்வரகுக் களி சாப்பிடுவது பாவமாகாது. இயற்கையின் நியதி எல்லாத் தரப்பு மனிதர்களுக்கும் இடந்தருவதாகவே அமைந்திருக்கிறது. அரிசிச் சோற்றுக்குக் கேழ்வரகு உணவு ஊட்டச் சத்தில் இம்மியும் குறைந்ததன்று. இருக்கும் பிரச்சினையெல்லாம் கெளரவம்தான். ‘காபிக்கு’ சோற்று நீரோ, நீர்மோரோ பயன் தருவதில் இம்மியும் குறைந்ததல்ல. ஆனால், இன்றைய சமூகத்தில் ‘காபி’ கெளரவப் பொருளாகிவிட்டது. செல்வப் பற்றாக்குறை இருக்கும் நாட்டில், இத்தகைய மனப் போக்குகள் இருக்கும் வரையில் உடைமை இல்லாதவனுக்கும் வாழ்க்கையில்லை. உடைமையானவனுக்கும் வாழ்க்கையில்லை.

உழைக்காத - திட்டமிட்டு வாழாத சிலருக்கு உறவு - நட்பு - மரியாதை - தயவு - தாட்சண்யம் என்ற பெயரால் உடைமைக்காரர்கள் மூலம் வழங்கப்பெற்றபொருள், மீண்டும் பொருளுற்பத்திக்குப் பயன்படாமையின் காரணமாக, உடைமையுடையவர்களையும் காலப்போக்கில் வறுமை வந்து வாட்டுகிறது. அதற்குப் பயந்து, கொடுக்கும் மனமுடையவர்கள்கூடக் காலப்போக்கில் மாறிவிடுகிறார்கள். அவர்களுக்கு அவர்களையே காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற உணர்ச்சி வந்துவிடுகிறது.

உடையவர்கள், இல்லாதவர்களுக்கு உழைத்துத் தொழில் செய்து முன்னேறுவதற்குரிய வாய்ப்புக்களைத்தான்