பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 33


பின்பற்றியதாகத் தெரிய வில்லை. அதுமட்டுமன்று. தனியுடைமையாளர்கள் எந்த நெறிமுறையையும் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்பது போல அரசியல் ஆட்சிமுறைகளும், மதத் தலைவர்களின் சாத்திரங்களும் அமைந்துள்ளன.

எத்தகைய கொடிய சுரண்டல்காரர்களும் மதச் சடங்குகள் மூலம் புனிதமாக்கப்படுவர் என்ற இழிநிலை அமைந்துவிட்டது. அதுபோலவே, ஆள்கிறவர்களுடைய ஆசாபாசங்களுக்கு இரைபோடும் தனியுடைமை முதலாளிகள் மேலும் மேலும் கொழுத்து வளரும் வகையில் சட்டங்கள் தளர்ந்தன; அல்லது தளர்த்தப்பட்டன. இதுவே வரலாற்றின் படிப்பினை. இன்றும் இந்த நிலையே தொடர்கிறது. ஆதலால், இன்றைய சூழ்நிலையில் திருக்குறள் காட்டும் சமுதாயத்தில் தனியுடைமைச் சமுதாயத்திற்கு ஏற்பு வேண்டுமா என்பதை நாம் கவனமாக மறு ஆய்வு செய்தாக வேண்டும். அங்ஙனம் ஆய்வு செய்யும்பொழுது நம்மைப் பொறுத்தவரையில் தனியுடைமைச் சமுதாய அமைப்பு அவசியமில்லாதது என்றே தோன்றுகிறது. தனியுடைமைச் சமுதாயத்தில் பொருள், தீங்கு தருவதாக வளர்ந்திருக்கிறது. மனித மதிப்பீடு குறைந்து பணமதிப்பீட்டுச் சமுதாயமாக வளர்ந்திருக்கிறது. பரம்பரைச் சொத்துரிமையின் காரணமாக உழைப்பின் ஊற்றுக்கண்கள் அடைபட்டுவிட்டன. ஆதலால், பொதுவுடைமைச் சமுதாயமே ஏற்புடையது. பொதுவுடைமைச் சமுதாய அமைப்பைத் திருக்குறள் உடன்பட்டிருக்கிறது என்பதற்கும் சான்றுகள் இருக்கின்றன. பொதுவுடைமைச் சமுதாயத்திலும் கூட உற்பத்திக் கேந்திரங்கள், கருவிகள் மட்டுமே பொதுவுடைமையாகும். உற்பத்தி செய்யும் மனிதன், உழைப்புக்குத் தகுந்த ஊதியம் பெறுவதற்கும் தேவைக்குரியவற்றைப் பெறுவதற்கும் முற்றிலும் உரிமையுடையவன். ஆக, பொதுவுடைமைச் சமுதாயத்திலும் கூட உழைப்பின் ஆற்றலிலும், வாழ்வின் தவிர்க்க இயலாத நிலையில் உறுத்தல் தராத

தி.3