பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

366 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வழங்கலாம். முதலுதவியாகச் செல்வ உற்பத்திக்குப் பயன்படக்கூடிய களத்தினையும் கருவிகளையும் வழங்கலாம். சமூகத்தில், உடையவனுக்குரிய கடமை அது. வறியவன் தான் பெற்ற களத்தினையும் கருவியையும் முறையாகப் பயன்படுத்தித் திட்டமிட்டு உழைத்து உற்பத்தியைப் பெருக்கி நெறிபட வாழ்ந்து தன்னுடைய செல்வத் தகுதியை வளர்த்துப் பேணிக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். இதுவே வாழ்க்கை முறை.

இப்படி வாழும் ஒருவருக்கு எதிர்பாராத செலவுகள் வந்தாலும் சமூகம் பொதுவாகவும், உடையவர்கள் தனிப்பட்ட முறையிலும் உதவி செய்து ஒத்துழைக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். இந்த அடிப்படையிலேயே தமிழர் இல்லங்களில் நிகழும் திருமணங்கள் - மரணங்களில் மொய் எழுதுதல் என்ற வழக்கம் ஏற்பட்டது. ஒருவன் செல்வமுடையவனாக இருப்பதை வறுமையுடையவர்கள் கண்டு, அந்தச் செல்வம் சேர்ந்ததற்குரிய நெறி முறைகளில் நியாயமானவைகளை, தான் ஏற்று நடவாமல் அழுக்காறு கொள்வதனால் மட்டும் பயன் விளையாது. அல்லது கொடுத்தால் என்ன, குறைந்தா போகிறது? என்று கருதுவதனாலோ கேட்பதனாலோ வறுமை தொலைந்துவிடாது.

செல்வம் என்பது உழைப்பினால் மட்டுமே உருவாவது. செல்வ உற்பத்திக்குப் பயன்படக்கூடிய களமும் கருவியும் இன்றைய சமூக அமைப்பின் காரணமாகச் சிலருக்கு இல்லாமலிருக்கலாம். ஆனால் சமூக உறவுகள் இன்னும் முற்றாக அழிந்துவிடவில்லை. களமும், கருவியும் உடையவர்களோடு அவை இல்லாதவர்கள் பூரணமாகத் தம்முடைய உழைப்பினை நல்கிச் செல்வத்தை உற்பத்தி செய்து, நியாயமான முறையில் உடையோன் - இல்லோன் என்ற மன வேறுபாடின்றித் தம்முட் பகிர்ந்து வாழ்வது அறவொழுக்கமாகும். இத்தகைய மனப்போக்கும் பரவலாக வளரவில்லை. செல்வ உற்பத்தியில், கவனம் செலுத்தாமல் உடையோனுக்கும்