பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

370 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அழுக்காறுமாகும். அவர்கள் மற்றவர்கள் மகிழ்வுடன் வாழ்தலைக் காணப்பொறார். மற்றவர் புகழினைக் கேட்கவும் பொறார். மற்றவர்கள் இனிது உண்டு, உடுத்து வாழ்தலைப் பார்த்து வெய்துயிர்த்து எரிச்சலடைவர். குற்றமிலராகிக் குடிசெய்து வாழ்ந்தாலும் குற்றம் கண்டுபிடிப்பர். குணம் மறைத்துக் குற்றம் துாற்றுவர். இத்தகையோர் சமுதாயத்தின் எலும்புருக்கி நோயாவர். இவர்களிடத்தில் கொஞ்சமும் தயவு, தாட்சண்யம் காட்டக்கூடாது.

இத்தகைய மனிதர்கள் உழைப்பொடு தொடர்புடைய எந்த வேலையும் செய்யார். ஆங்காங்கிருந்து வருமொழி பேசி அரட்டையடித்து அயர்தலே இவர்கள் வேலை. இவர்கள் மற்றவர்கள் புகழுக்குக் களங்கம் படைப்பர். மற்றவர்கள் வாழ்விலும் மாசுகளைக் கற்பனை செய்து ஏற்றுவர். இத்தகையோர்களாலேயே சமுதாயம் அடிக்கடி அலைப்புறுகிறது. இத்தகைய கீழ்மக்கள் எங்கு எந்தக் கோலத்தில் உலவினாலும் கண்ணோட்டமின்றிக் கடிந்து ஒதுக்குதல் கடமை.

"உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

வடுக்காண வற்றாகும் கீழ்"

(1079)

என்பது குறள்.

திருவள்ளுவர் இங்கு உடுப்பதையும் உண்பதையும் மட்டுமே குறிப்பிட்டுள்ளார். செல்வச்செழிப்பைக் கூடக் குறிப்பிடவில்லை. மேம்பாடான வாழ்க்கையைப் பற்றிக் கூடக் குறிப்பிடவில்லை. மிகச் சாதாரணமான உண்ணலையும் உடுத்தலையும் கண்டாலே காழ்ப்புற்றுக் குற்றம் காண்பர். திருவள்ளுவர் காலத்தில் உண்ணலும் உடுத்தலுமே ஒரு பெரிய கேள்விக் குறியாக இருந்திருக்கும்போல் தெரிகிறது. இன்றோ, உண்ணல் - உடுத்தல் மட்டுமல்ல, பதவி - புகழ் முதலியனவும் சேர்ந்திருக்கின்றன என்பது அறியத்தக்கது.