பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 371



தம்இல் இருந்துண்ணும் தனி இன்பம்!


யிர்தங்கி நின்றுலவும் உடலியல் வாழ்க்கைக்கு உழைப்பு அணிகலனாகும்; அழகாகும். உழைப்பே மனிதனின் இயற்கைக் குணம். உழைத்து உலகிடைச் செல்வத்தைப் பெருக்கிப் பலருக்கு வழங்கிப் பயன்பட வாழ்தலும், தாம் துய்த்து வாழ்தலும் இன்றியமையாத குணமாகும். உழைத்து வாழும் இயல்புடைய சமுதாயத்தில் பரம்பரைச் சொத்துரிமை மதிப்பினைத் தராது. அதுமட்டுமின்றிச் சுரண்டி வாழும் தீய இயல்புடையவர்களும் இல்லாதொழிவார்கள். பரம்பரைச் சொத்துரிமை மனிதனின் இயல்பாய அறிவையும் ஊக்கத்தையும் உழைப்பாற்றலையும் காலத்திற்குக் காலம் கெடுத்து மனித சமுதாயத்திற்குத் தீங்கை விளைவிக்கிறது. சுரண்டி வாழ்பவனோ அறிவு, ஊக்கம், உழைப்பு ஆகியவற்றை இழப்பதோடுமட்டுமின்றி ஒழுக்கக் கேடுகளுக்கும் ஆளாகிறான்; மற்றவர்களுக்குத் தீங்கிழைக்கும் இயல்புடையவனாகிவிடுகிறான். காலப்போக்கில் இந்த இரண்டு வர்க்கத்தினரும் தம்மை வறுமையில் ஆழ்த்திக் கொள்வதோடன்றி வற்றாத வளங்கொழிக்கக்கூடிய நாட்டையும் வறிதாக்கிவிடுவர். அதனாலன்றோ, "வினையே ஆடவர்க் குயிரே" என்று குறுந்தொகை பேசிற்று. ஆடவன், ஆள்வினையுடையவன் ஆக்கப்பாடு உடைய வாழ்வுக் குரியவன். எவன் ஒருவனது வாழ்க்கையில் ஆள்வினைத் திறன் பெருகி வளர்ந்திருக்கிறதோ அவனே ஆடவன். ஆனால் இன்றோ, ஆள்வினையின்றி ஆயிழையைத் தேடியலைந்து மக்கட்பெருக்கம் செய்து வறுமையுலகை வழங்குவோரே ஆடவர் என்று பெயர் சொல்லித் திரிகின்றனர். ஐயகோ, கொடுமை!

தமிழின மரபில் பழங்காலத்தில் ஆடவன் ஒருவன் காதலியைப் பெறவேண்டுமென்றால் ஆள்வினைத் திறனையும், உழைப்பையும் விலையாகக் கொடுக்கவேண்டிய