பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 373


மனிதன், எட்டடிக் குச்சு ஆனாலும் தானே முயன்று கட்டிய குடிசையில் வாழ்வதற்கு ஈடு ஏது? இணையேது? பலர், பரந்த இடத்தில் அடுக்கிய மாளிகையில் குடியிருக்கின்றனர். ஆனால் அஃது அவர்தம் சாதனையன்று, தன் உழைப்பின்றிப் பிறருழைப்பில் உருவாய உயரிய மாளிகையில் உலவி வாழ்வதிலும், தான் எழுப்பிய குடிசையில் வாழ்வது இன்பத்துள் இன்பமாகும். அடுத்து, தான் உழைத்து ஈட்டும் பொருளில் அறுசுவை உணவாக்கிப் பலருக்கு வழங்கி, அவர்கள் உண்ண மகிழ்ந்து தாம் உண்டு வாழ்தல் பெருமையுள் பெருமையாகும். இந்த இன்பம் காதலியின் பால்பெறும் இன்பத்தை நிகர்த்தது என்று இயைத்துக் காட்டுகிறார் வள்ளுவர். உடலுக்கு உழைப்பில் இன்பம்; உணர்வுக்கு ஒப்புரவில் இன்பம்; உயிருக்குக் காதலில் இன்பம். இம்மூன்றும் நிகழ நிழல்தந்து இன்பந்தந்து நிற்பது தன் குடிசை. இந்த இயைபுகளை எண்ணிப் பார்க்கும் பொழுது நெஞ்சம் உவகை கொள்கிறது. உடல், உழைப்பில் திளைத்து மகிழ்தலும், உணர்வு ஒப்புரவில் கலந்து மகிழ்தலும்; உயிர், காதலில் கலந்து மகிழ்தலும் ஒரு சிறந்த தலைமகனின் சிறப்பு. இத்தகைய தலைசிறந்த ஆடவர்களாலேயே நிலவுலகம் செழிப்புறும்; துன்பம் தொலையும்; உறவு பெருகி வளரும்; காதலின்பம் விளையும். இதனை,

"தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்

அம்மா அரிவை முயக்கு"

(1107)

என்ற திருக்குறளை நினைந்து இன்புறுக.

அறிவின் இலக்கணம்!

திருவள்ளுவர் ஓர் இலக்கியப் படைப்பாளர் மட்டுமல்லர், அறநூல் செய்த அறவோர் மட்டுமல்லர்; அவர்ஓர் அறிவுத்துறை அறிஞருமாவார். அவர் செய்த திருக்குறள் ஓர் உயிரியல் - அறிவியல் நூலாக விளங்குகிறது.