பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

374 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திருவள்ளுவர் ஒரு சிறந்த முற்போக்கு அறிஞர். இன்றைய உலகில், ‘முற்போக்கு’ ‘பிற்போக்கு’ என்ற வார்த்தைகள் சரளமாக அடிபடுகின்றன. காக்கை கறுப்பாகவும் இருக்கலாம் என்று கூறப்படுவதுகூட முற்போக்கு என்று பெயர் பெற்று விளங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால், திருவள்ளுவர் இந்த வகையினர் அல்லர். அவர் உண்மையிலேயே ஒரு முற்போக்கு அணியைச் சார்ந்தவர். சமுதாயத்தில் பழைய பழக்க வழக்கங்களே சிறந்தவை என்று கண்மூடித் தனமாக நம்பும் மனப்போக்கு இன்னமும் இருந்துதான் வருகின்றது. நேற்றைய அறிவே, அறிவு என்றும், இன்றைய அறிவு பயனற்றது என்றும் கருதுபவர்கள் இன்றும் நம்மிடையில் பலரிருக்கின்றனர். முன்னோர் அறிவே, மூதறிவு என்றும், பின்னோர் பேதைகளென்றும் பேசுபவர்கள் சமுதாய அரங்குகளில் இல்லாமலா இருக்கிறார்கள்? ஆனால், நம்முடைய ஆன்றோர்கள் இங்ஙனம் கருதவில்லை. முன்னைப் பழமை எப்படிச் சிறந்ததோ, அதுபோலவே பின்னைப் புதுமையும் சிறந்தது என்றே திருவாசகம் கூறுகிறது. ஒரு மரம் என்றால், அதில் சருகுகள் விழும். பழுப்புகள் இருக்கும். இவையனைத்தும் ஒருசேர, ஒரு காலத்திலோ அல்லது ஒன்றன்பின் ஒன்றாகவோ தோன்றி விளங்கும். ஆதலால், பழமைக்கும் புதுமைக்கும் எப்பொழுதும் போர் வராது; போர் வரவும் கூடாது! இரவும் பகலும் போலப் பழமையும் புதுமையும் ஒன்றினையொன்று தொடர்ந்து வருவதே இயற்கை. தொன்மையானவையெல்லாம் சிறப்புடையன என்று கருதவும் முடியாது. இன்று தோன்றுவனவெல்லாம் புதுமை என்று தள்ளவும் முடியாது. பழமைக்கும் புதுமைக்கும் இடையே நிகழும் போராட்டம் தான் தமிழர் சமயப் போராட்ட வரலாறாக வடிவம் பெற்றது.

திருவள்ளுவர் சிறந்த அறிவுக்கு இலக்கணம் வகுத்துத்தந்தார். நேற்றைய அறிவு இன்றையப் புதுமையை ஏற்றுக்