பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 375


கொள்ள மறுத்தால் வாழ்க்கையில் உயிர்ப்பு இல்லை. வாழ்க்கை தேங்கிய குட்டையாகப் போய்விடும். தேங்கிய குட்டையின் தண்ணீர் குடிக்கவோ, குளிக்கவோ பயன்படாது. அதுபோலவே, சிந்தனையிலும் அறிவிலும் தேங்கிய மனிதர்கள் ஒருபோதும் பயன்படமாட்டார்கள். திருக்குறள் கருத்துப்படி அறிவுக்கு எல்லைக்கோடு இல்லை; அறிவின் இயல்பு மேலும் மேலும் வளர்தலுக்குரியது. இன்றைய அறிவை நோக்க நேற்றைய அறிவு அறியாமையாகத் தெரியவேண்டும். அப்படித் தெரிந்தால்தான் மனிதன் சிந்திக்கிறான் என்பது வெளிப்படும். சிந்தித்துத் தன்னைச் செழுமைப்படுத்திக் கொள்ளாத மனிதன் காலத்தை வென்று நிற்பதில்லை. மேலும் மேலும் வளராத அறிவு இன்பம் தராது. உலகியல் வரலாற்றிலேயே நேற்றைய அறிவை, வளரும் அறிவு வென்று விளங்குவதைத்தான் பார்க்கிறோம். விஞ்ஞானத்தின் சாதனைகூட இதுதானே!

நேற்று அம்புலி! முந்தாநாள் சந்திரன் தெய்வம்! அதற்கு முந்திய நாள் சந்திரன், பல மனைவிகளுள்ள குடும்ப நிலையினன் என்றிருந்த செய்திகளை அறியாமையாக்கி, முக்காடிட்டு, மூலையில் கிடத்திவிட்டு ‘அப்போலோ’ பறந்திருக்கிறது. சந்திரன் பூமியைப்போல் ஒரு கண்டம் என்று உலகத்திற்கு உணர்த்த! சென்ற சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, அணு என்றால் பிளக்க முடியாதது என்ற கருத்து விஞ்ஞானிகளிடையே நிலவியது. ஆனால், இந்த நூற்றாண்டில் அணுவைத் துகள்களாக உடைக்க முடியும் என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்திருக்கிறார்கள் ஆதலால், அறிவு நிலைத்த ஒன்றன்று; அது வளரும் தன்மையது. அறிவு வளர வேண்டுமென்றால் அக்கறையோடு நேற்றைய அறிவை ஆய்வு செய்து சமுதாயத்திற்குத் தீங்கு தராத வகையில் ஏற்றுக்கொள்ளும் துணிவுவேண்டும். காதல் வாழ்க்கையில், உணர்வு கலந்து ஒத்துக் கூடி வாழும் வாழ்க்கையில் இன்பம் மேலும் மேலும் கூடும். அந்த இன்ப வேட்கை தணியாது.