பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 377


கிடைக்கக்கூடிய இன்பத்தை ஒருவன், ஒருத்தியில்லாமலும், ஒருத்தி, ஒருவன் இல்லாமலும் பெற முடியாது.

மணமற்ற மலர்களும் உண்டு. ஒளியற்ற மணிகளும் உண்டு. இன்சுவையற்ற தமிழும் உண்டு. அதுபோலக் காதல் வாழ்க்கை இருக்க முடியாது. காதல் வாழ்க்கை முழுமையானது தப்பாமல் இன்பம் தரவல்லது. ஆதலால், திருவள்ளுவர் இந்த இன்ப வாழ்க்கையை விளக்கப் புதிய முறையை எடுத்தாளுகின்றார். இந்த இனிய வாழ்க்கையின் இயல்பை, பொருள்களை மையமாகக் கொண்டல்லாமல், உணர்வையும், உறவையும், நட்பையும் மையமாகக் கொண்டு விளக்குகிறார். உடலுக்கு, உயிர் இன்றியமையாதது. அதுபோலவே உயிர்க்கு உடலும் இன்றியமையாதது. ஒன்றையன்றிப் பிறிதொன்றில்லை ஒன்றின் பயன் பிறிதொன்றினைச் சார்ந்தேயிருக்கிறது. இன்புறுதலும், இன்புறுத்தலும் ஒன்றினுக்கொன்று செய்து கொள்கின்றன. உயிர், உணர்வால் உடலுக்கு இன்பம் தருகிறது. உடல் துய்த்தல் வழி உயிர்க்கு உணர்வைச் சேர்க்கிறது. உயிருணர்வின்றி, உடலின் இயக்கத்திற்குச் சுவையில்லை; இன்பமில்லை! உயிரின் பண்புகள் உடலின் இயக்கத்தினாலும், துய்த்தலினாலும் முழுத்தன்மை அடைகின்றன. இதனை உணர்ந்த திருவள்ளுவர்,

"உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன

மடந்தையொ டெம்மிடை நட்பு"

(1122)

என்று பேசுகிறார்.

உடலுக்கும் உயிருக்கும் இடையேயுற்ற நட்பே இந்த உலகில் மிகவுயரிய நட்பு; எந்தக் காரணத்தினாலும் பிரிக்க முடியாத நட்பு; இன்பமோ, துன்பமோ இரண்டுக்கும் இயைபானது. உடலுக்குற்ற துன்பத்தை உயிரே அனுபவிக்கிறது. உயிரைப் பிரிய நேரிட்டால் உடல் தன்னைப் பயனற்றதாக்கிக்கொண்டு எரியில் இடத்தக்க நிலைமையைத் தோற்றுவித்துக்கொள்கிறது. அறிவின் விளக்கமோ அல்லது