பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

378 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அன்பின் விளக்கமோ உயிரும் உடலும் ஒன்றியிருந்தால்தான் ஏற்பட முடிகிறது.

இங்கு, உடம்பு என்பதைப் பருவுடலாகக் கொள்ளாமல்; நுண்ணுடலாகக் கொண்டால் மிகச் சிறந்த பொருள் கிடைக்கிறது. நுண்ணுடலும் உயிரும் எப்பொழுதும் பிரிவது இல்லை. தூய காதல் அதுபோலவேயாம். காதலர்கள் பிறப்புக்களுக்கு அப்பாற்பட்டும், காதலர்களாகவே மீண்டும் மீண்டும் பிறந்து வாழ்கின்றனர்.

அதாவது உயிரினுடைய அகக் கருவியாகிய புத்தி தத்துவத்திலேயே இந்த விழுமிய காதல் தோன்றித் தழைத்து வளர்ந்து அங்கேயே தங்குவதால், உலகியலில் ஏற்படும் மரணம், காதல் வாழ்க்கையை மறைத்து விடுவதில்லை. ஆதலால், காதல் வாழ்க்கை, நுண்ணுடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவினையொத்ததாக அமைதல் வேண்டும். அத்தகைய காதல் வாழ்க்கையே தூய காதல் வாழ்க்கை. இந்தக் காதல் வாழ்க்கையையே தெய்வத்தன்மையுடையதாக ஆன்றோர் கருதுகின்றனர். உடற் சார்புடைய வாழ்க்கை காதலுமன்று; காமமுமன்று; தாழ்வான தீமை. நாடு முழுதும் சிறந்த காதல் வாழ்க்கை மலர்தல் வள்ளுவ்த்திற்குப் புகழைத் தரும்.

வாழும் ஊர்!

னிதர்களின் இன்ப வாழ்வுக்கு இன்றியமையாத் தேவைகள் பற்பல. ஒன்றிருந்து ஒன்றில்லையானாலும் வாழ்க்கை இன்பமாக இருக்காது. தேவை பலவற்றுள்ளும் தலையாயது அவன் வாழும் ஊரின் நல்லியல்பாகும். இன்று பல ஊர்கள் பெயரளவில் ஊர்களாக இருக்கின்றனவே தவிர, உண்மையில் ஊராக இல்லை. ஊர் என்றால் பலபேர் கூடி வாழும் இடம் என்று பொருள்படும். ஓர் ஊரில் வாழும் மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஒத்தது அறிந்து