பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 379


உணர்வால் ஒன்றுபட்டுக் கூடித் தொழில் செய்து உறவு கலந்து உண்டு மகிழ்ந்தும், மகிழ்வித்தும் வாழும் மக்களையுடையதே ஊராகும். ஊரில், வடிவத்தால் பல்வேறு தனி மனிதர்கள் வாழ்ந்தாலும், உறவாலும் உற்று உதவும் பண்பாலும் வேறுபாடற்ற ஒரு சமுதாய உணர்வு நிலவவேண்டும். பெயரளவில் பல்வேறு குடும்பங்களாக வாழ்ந்தாலும் அவர்களுக்கிடையில் ஒரு குடும்ப உணர்வு கால்கொண்டிருக்கவேண்டும். இத்தகைய ஊரே, ஊரெனப்படும்.

ஒரு மனிதனின் வாழ்க்கை வெற்றிக்கு, அவனுக்கு இயைபான பலர் வாழக்கூடிய ஊராக இருந்தாலொழிய அவன் முன்னேற முடியாது. அவன் வாழும் ஊரையும் முன்னேற்ற முடியாது. இவ்வியைபுயென்பது வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடிய வழிகளிலேயாம். தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, பொது வாழ்க்கையிலும் சரி, ஒவ்வொரு மனிதனுக்கும் கூட்டு வாழ்க்கைப் பொறுப்பு இருக்கிறது. ஒருவருக்கொருவர் துணை நின்று தோளொடு தோள் கொடுத்து வாழ, ஓரூரில் இருக்கிறவர்கள் கற்றுக்கொள்ளத் தவறினால் ஆங்குத் துன்பமே நிலவும்; பண்புக்குப் பதில் பகைமை குடிகொள்ளும்; உழைப்புக்குப் பதில் உறிஞ்சி வாழ்தலே உருக்கொள்ளும்; வளத்திற்குப் பதில் வறுமை இடம் பெறும்; நெஞ்சு நிறைந்த அன்பு வழிப்பட்ட உறவுக்குப் பதில் வஞ்சினம் வேர்விடும்; ஊர், ஊராக விளங்காது. காலப்போக்கில் சுடுகாடாக மாறும். ஒத்த உணர்வு படைத்த இனம் இல்லாத ஊரில், ஒருவன் எந்தக் காரியத்தையும் வெற்றியுடன் செய்து முடிக்க முடியாது. சுருதியில்லாத பாட்டு உண்டா? பண் இல்லாத பாட்டு உண்டா? இருக்க முடியாது; இருந்தாலும் சுவைக்காது. அதுபோலத்தான் தமக்கு இனம் அல்லாத மக்களோடு கூடி வாழும் வாழ்க்கை கொடிய துன்பத்தைத் தரும். நம்முடைய இயல்பிற்கும் இலட்சியத்திற்கும் இசைவாகத் துணை நிற்கக் கூடிய