பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

384 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நம்பி இருக்கிறது. வையகத்திற்கு, இயல்பில் சில வளமுண்டாயினும், வாழ்வார்கள் இல்லையாயின், அவையும் பயனற்றுப் போகின்றன. அதனாலன்றோ திருவள்ளுவர் ‘வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால்’ என்று கூறுகின்றார். வான்மழை பெய்யும் பொழுது வாழ்வார் மகிழ்ந்து முழுதாகப் பயன் துய்ப்பார். வாழாதார், மழையைக் கண்டால், நனைந்தாலுமேகூட உள்ளவாறு உரிய பயன் காணார்; பயனும் துய்த்தறியார். அதுபோலவே, காதல் வாழ்க்கையென்பது, அரிய ஒன்று. காதல் வாழ்க்கை செவ்வியதாக அமைய ஆற்றல் அதிகம் தேவை. காதல் வாழ்க்கை எளிதாகத் தோன்றலாம். ஆனால், அருமையானது. அஃது ஒரு பருப்பொருள் அன்று, நுண்பொருள். உடற்சார்பு உடையது அல்ல; உயிர்ச்சார்புடையது. அறியாமையின் பாற்பட்டதல்ல; அறிவின் பாற்பட்டது. இன்புறுதல் மட்டுமல்ல; இன்புறுத்தலும் இயைந்தது. மிக மிக மென்மையானது. வள்ளுவம் ‘மலரினும் மெல்லிது காமம்; சிலரதன் செவ்வி தலைப்படுவார்’ என்று கூறுகிறது. சார்பால் ஒரு வீட்டில் சேர்ந்து வாழ்வோர், காதலராகி விடமாட்டார்கள்.

கணவன் - மனைவி என்ற பெயர் பூண்டமையாலும் - மனைகளில் வாழ்கின்றமையாலும், மக்கள் பலரைத் தந்தமையினாலும், அவர்கள் காதலராகி விடமாட்டார்கள். அவையெல்லாம் ஊன் விளையாட்டாகவும் இருக்கலாம். ஊனைக் கடந்தது காதல். உயிர்கள் ஒன்றாதல் காதலின் சித்து. இங்ஙனம் காதல் செய்து வாழ்பவர்கள் வாழ்க்கையிலேயே கலவி, பயனுடையதாக, பொருளுடையதாக உயிர் வாழ்க்கையைத் துளிர்க்கச் செய்கிறது. அப்பொழுதே விருப்பமும் விழுமியதாகி தவமும் கை கூடுகிறது. இத்தகு தவம் நிறைந்த நற்றவக் காதல் வாழ்க்கை, வள்ளுவம் காட்டும் காதல் வாழ்க்கை. வானம் எல்லோருக்குமாகத்தான் பெய்கிறது. ஆனால் வாழ்வோரே பயன்படுத்திக்கொள்கிறார்கள். எல்லோருந்தான் கூடி வாழ்கிறார்கள்.