பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 35


வளர்ச்சிக்கு இசைந்தவாறு மக்களின் நுகர்வுத் திறனை வளர்ப்பதற்கும் தொழில் வளர்ச்சி இன்றியமையாதது. "உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்" என்பது பழங்கால நாகரிகம். "கந்தையானாலும் கசக்கிக் கட்டு, கூழானாலும் குளித்துக் குடி” என்பது கொழுத்த நிலப்பிரபுத்துவ காலத்தில் எழுந்த மொழி. இன்றைய சூழ்நிலையில் நுகர்வுத் திறன் வளர்வது வரவேற்கத் தக்க ஒன்றேயாம். நுகர்வுத் திறன் வளர வளரத் தொழில்கள் வளரும்; மானுடத்தின் வாழ்க்கையும் நலமுற அமையும். ஆதலால், திருக்குறள் காட்டும் சமுதாய அமைப்பில் நிலம் பொது விளைபொருள்களும் பொது. வேளாண்மைத் துறையில் கூட்டுச் சாகுபடி முறை அறிமுகப்படுத்தப் பெறும்; வளரும் புத்தம் புதிய தொழில்கள் கூட்டுறவு முறையில் அமையும்; வாணிகம் முழுவதும் கூட்டுறவு முறையில் அமையும்; நடைபெறும். கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வர்த்தகம் செய்யச் சில தனி நபர்கள் உரிமை பெறலாம். திருக்குறட் சமுதாய அமைப்பில் செல்வக் குவியல் கட்டாயம் தவிர்க்கப் பெறும்.

மானுட வாழ்க்கை சிறப்புறப் பல்வேறு நலன்கள் தேவை. அவற்றுள் சிறப்பானவை உடல் நலம், ஆன்ம நலம் ஆகியனவாம். இவையிரண்டும் பல்வேறு நலன்களை உள்ளடக்கியவை. காற்று, தண்ணீர், உணவு, உழைப்பு, குடியிருப்பு, மருந்து ஆகியவற்றால் உடல் நலம் அமையும். கல்வி, கேள்வி, அறிவு, மண வாழ்க்கை, பிரார்த்தனை ஆகியவற்றால் ஆன்ம நலம் அமையும். இவைகளை மக்கள் அனைவரும் எளிதில் பெறத் திருக்குறள் கண்ட ஆட்சி, வழி வகை செய்யும். ஆற்றல் துடிப்புடைய மக்கள் தம் தேவைகளைக் கூட்டுறவால் உருவாக்கிக் கொள்ளும் சூழலும் வாய்ப்பும் உருவாக்கப் பெறும். அரசு துறைதோறும் முழு அளவில் துணை நிற்கும்.

கிராம, நகர அளவில் நலன்களுக்குரிய அனைத்து நலப் பணிகளையும் மக்களே கூட்டு முயற்சியில் அமைத்து நிர்வாகம் செய்வர். கோட்டம், மாவட்டம் அளவில் - பெரிய