பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

388 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மனித வாழ்வின் இரட்டை நாடிகள் நட்பும், காதலும். இவ்விரண்டுமின்றி மனித வாழ்க்கை, இல்லை. அதனாலன்றோ பாரதி, "காதல் இன்றேல் சாதல்" என்று சொன்னான். மனிதன் முதலில் சந்திக்கும் காதல் நட்பேயாகும். காதல் என்ற சொல் பொதுவானதே. ஒருவருக்கு ஒன்றன்பால் ஏற்படும் ஆரா அன்பினை - தன்னலச் சார்பற்ற அன்பினை - இடையீடுகளைக் கடந்தும் காட்டப்படும் அன்பினை - மதிப்பு, அவமதிப்புகளைக் கடந்த அன்பினை தோளொடு தோள்மட்டுமல்ல, உயிருக்கு உயிரென ஒன்றித்து வளரும் அன்பினைக் காதல் என்று சிறப்பித்துக் கூறுவது வழக்கம். காதல் காழ்ப்பு அகற்றும்; கணிவினைத் தரும். காதல் உடம்பொடு பட்டதன்று; உயிர்த்தொடர்புடையது. காதல் உடம்பினை வளர்ப்பதன்று; வாயினால் சிரித்து மகிழ்தலுக்கன்று; உயிரைத் தழைக்கச்செய்து வளர்ப்பது காதல்; நெஞ்சு நிறைந்த களிப்புக்கும் கிளுகிளுப்புக்கும் பயன்படுவது காதல். இக்காதல் ஒருவருக்கு, எல்லாம்வல்ல இறைவனிடத்திலும் ஏற்படலாம். "காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி" என்று திருஞானசம்பந்தர் ஓதியுள்ளார். ஓர் ஆண், மற்றோர் ஆணிடத்தில் காட்டும் நட்பைக்கூட முற்றி முறுகி வளரும்போது காதல் என்று சிறப்பித்துக் கூறுகிற அருகிய வழக்குண்டு. ஆனால், உலகியலில் பெரும்பாலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள அன்புணர்ச்சியைத்தான் காதல் என்று குறிப்பிடுவது பெருவழக்காகிவிட்டது. அதற்குக் காரணம் பிறதுறைக்காதல் உலகில் அருகிப் போனமையேதான். இறைவனிடத்தில் இன்று காதல் செய்வார் இருக்கிறார்களா? என்ற வினா எழுப்பின் விடை கிடைப்பதரிது. ஏன்? இல்லையென்றே துணிந்து கூறலாம். இறைவனிடத்தில் காதல் செய்வோர் உளராயின் இறைவன்தான் மண்ணில் விளையாடுவானே! நட்புலகிலும் கூடக் காதற்கிழமை