பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அளவில் செய்யவேண்டியவற்றை அரசு அமைத்துச் செய்யும். அனைவருக்கும் கட்டாயமாக, மேல்நிலைக் கல்வி வரையிலும் மற்றும் தொழிற்கல்வியில் மேல்நிலை வரையிலும் கல்வி வழங்குவது சமுதாயத்தின் - அரசின் பொறுப்பும் கடமையுமாகும். கல்வித் தரம் பேணப் பெறும். கல்வித்துறையில் மாணவர்கள் தரத்திற்கும் நாட்டின் தேவைக்கும் ஏற்பக் கற்க அனுமதிக்கப் பெறுவர். அதாவது, இளைஞர்கள் பெரும்பாலும் உற்பத்தி சார்ந்த கல்வியிலேயே ஊக்குவிக்கப் பெறுவார்கள். எனினும், விருப்பார்வங்கள் புறக்கணிக்கப் பெறமாட்டா. மனித நலத்திற்குத் தேவையான கலை, இலக்கிய, கலாச்சார, பொழுதுபோக்கு வசதிகள் அனைவருக்கும் எளிதில் கிடைக்க வழி வகை செய்யப் பெறும்.

அனைத்து மட்டத்திலும் அனைத்துப் பணிகளையும் கண்காணித்து நெறிமுறைப்படுத்த அரசு அலுவலர்களும் மக்கள் பிரதிநிதிகளும் அடங்கிய "மக்கள் குழு"க்கள் அமைக்கப் பெறும். இம் மக்கள் குழுக்களே பணியாளர் தேர்வு, பணியாளர்களின் பணிக்காலக் கண்காணிப்பு முதலிய பணிகளை மேற்கொள்ளும். அனைத்து மட்டத்தி லும் பணித்திறன் கண்காணிக்கப் பெறும் வளர்க்கப் பெறும். முதியோர் இல்லங்கள் அமைக்கப் பெறும்.

ஒரு சிறந்த சமுதாயத்தில் நீதிமன்றங்கள் தேவைப்பட மாட்டா. ஆயினும் மானுடம் முழுமையான, ஆன்ம நலத்தை அடையும் வரை இங்கும் அங்குமாகச் சிற்சில மோதல்கள் இருக்கவே செய்யும். அதனால், குறைவான எண்ணிக்கையில் குறைவான அளவுக்கு முறைமன்றங்கள் அமைந்து இயங்கும். முறை மன்றங்களுக்கு எடுத்த எடுப்பில் சென்று விடாதவாறு நடைமுறைகள் கடினப்படுத்தப் பெறும். தொடக்க நிலையில், நகர, கிராம அளவில் மக்கள் முறையீட்டு மன்றங்கள் தனிமனித, குடும்பச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் அமைக்கப் பெறும்.