பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

396 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஏனெனில் கண்கருவி மட்டுமே. அதற்குக் கருத்தையோ அல்லது பண்பையோ அல்லது நோக்கத்தையோ சேர்ப்பது நெஞ்சமேயாம். ஆதலால் மனிதனின் ஈடு இணையற்ற உறுப்பு நெஞ்சு. மனிதன் வாழப்போகிறானா? வீழப்போகிறானா? என்பதை நிர்ணயிக்கக்கூடிய சக்தி நெஞ்சத்திற்கே உண்டு. மனிதன் அடையக்கூடியது நரகமா? சொர்க்கமா? என்பதை நிர்ணயிக்கக்கூடியது நெஞ்சமேயாம். இறைவனேகூட நெஞ்சத்தில் கோயில் கொள்ளவே விரும்புகின்றான். இத்தகைய பேராற்றலுடைய நெஞ்சினிடத்து உறவும் உரிமையும் ஏற்படுத்திக்கொண்டு வாழ்தலே வெற்றிக்குரிய வழி.

இத்தகைய இனிய தத்துவத்தைத் திருவள்ளுவர் காமத்துப்பாலிலே அழகுற விளக்குகின்றார். காதல் உடல் வழிப்பட்டதன்று; உயிர் வழிப்பட்டது. பல்லூழிக்காலம் தொடரக்கூடியது. புணர்ச்சியில் மகிழ உடல் தேவை. உணர்ச்சியில் மகிழ உடல் தேவையில்லை. புணர்ச்சிக்குக் கால எல்லையுண்டு; நில எல்லையுண்டு. உணர்ச்சிக்கு இவ்விரண்டுமில்லை. புணர்ச்சியைவிட உணர்ச்சியே சிறந்தது. அதனால்தான் போலும் கூடலினும், ஊடல் இனிதென்றார் வள்ளுவர். கூடலில் இணைவது வியப்பன்று. ஊடலிலும் மாறுபடா அன்பும் உறவும் உடையராயிருத்தல் உணர்ச்சியின் நிறைவைக் காட்டும். அது மட்டுமின்றி உணர்ச்சி நிறைந்தவர்கள் ஊடல் கொள்ளும் பொழுது வடுக்காணார்; வசை பேசார், உணர்ச்சியற்றார், நெஞ்சிலே புண்படுத்துவர். ஆதலால் நெஞ்சினும் இனிய உறவில்லை. ஒரு மனிதன் எப்பாடுபட்டேனும் நெஞ்சினை உறவாக்கிக் கொள்ளவேண்டும். அதனால்தான் போலும், திருஞானசம்பந்தரும் ‘நன்னெஞ்சே’ என்று நெஞ்சை இரந்து கேட்டு தன்வயப்படுத்த முயலுகின்றார். எப்படியோ நிகழ்ந்துவிட்டது? என்று சிலர் கூறுவர். அஃதொரு பொய். "நெஞ்சிற் சிறந்த கரியிலை" என்று கலித்தொகை கூறும். நெஞ்சறியாத