பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள்397


பொய்யில்லை, சூதில்லை. ஏன்? ஒரு மனிதன் தன் நெஞ்சறியாது எதையும் செய்ய முடியாது. வேறு எந்த உறுப்பையும் எதிலிருந்தும் மறைக்கலாம். ஆனால் நெஞ்சினிடமிருந்து எதையும் மறைக்க முடியாது. அதனால் தான் போலும் "தன் நெஞ்சறிவது பொய்யற்க!" என்றது வள்ளுவம். இஃதொரு நல்ல குறள். சிலர் பொய்யையே மெய்யாகக் கூறுவார்கள். மாணிக்கவாசகரும் ‘பொய்யர் தம் மெய்யும்’ என்றார். வாயிலிருந்து வெளிப்படும் ஒலி ஒரு பொய்க்கு மெய்ம்மைக் கோலம் தந்து உலவவிடுகிறது. அரங்கில் நிற்பவன் இராணியானாலும் ஒப்பனை அறையிலிருந்தவர்களுக்கு, அவள் நடிப்புக்கூலி வாங்கும் ‘சிகப்பி’ என்று தெரியாதா? என்ன? ஆதலால் மெய்போலப் பொய் கூறுபவரைப் பார்த்துத்தான் வள்ளுவர் நெஞ்சறிந்த பொய்யைக் கூறவேண்டாம் என்றார். ‘கெட்டிக்காரன் புளுகு’ என்பதும், பொய்யை மெய்யாக்கிய அறிவுப் புலனின் ஆற்றல் பற்றியதேயாம். ஆனாலும், நெஞ்சு எப்பொழுதுமே உள்ளதை வெளிப்படுத்திக் காட்டும் ஒர் உறுப்பாகும். அதற்கு உள்ளதை மறைக்கத் தெரியாது. ஒப்பனை செய்யவும் தெரியாது.

நெஞ்சமே நமக்கு உறவில்லாது போகும்பொழுது எப்படி அயலார் உறவிருக்க முடியும்? அயலார் உறவைப்பெற்றுத் தருவதும், பெற்ற உறவைப் பேணிக்காப்பதும், அன்புவழிப்பட்ட நெஞ்சங்களின் கடமையாகும். அந்த நெஞ்சு அது தவறும்பொழுது எங்ஙனம் அயலார் உறவாக இருப்பர். ஆதலால், இந்த உலகியலில் காதலில் வெற்றி பெறவேண்டுமானாலும் சரி, நட்பில் வெற்றிபெற வேண்டுமானாலும் சரி, அல்லது எடுக்கும் காரியங்களில் வெற்றிபெற வேண்டுமானால் சரி, முதலில் நெஞ்சை உறவுபடுத்திக் கொள்ளவேண்டும். நம்முடைய நெஞ்சே நமக்கு உறவில்லாத வழி எதைத்தான் செய்யமுடியும்? என்பது வள்ளுவத்தின் வினா.