பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

398 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


                                                    "தஞ்சம் தமரல்ல ரேதிலார்
                                                    தாமுடைய நெஞ்சம் தமரல் வழி" (1300)

என்பது குறள்.

பிணங்கலும் இன்பம்!

வாழ்க்கை, மிகமிக மென்மையானது. இன்பமே இயல்பாகவுடையது. தகுதி சான்றவர்களுக்கு வாழ்க்கை, புணர்ச்சியிலும் இன்பம் தரும்; பிணங்குதலிலும் இன்பம் தரும். தகுதிக் குறைவானவர்கள் புணர்ச்சியில் மட்டுமே இன்பம் காண்பர். பிணங்குதலைப் பெரும் பகையாகக் கருதுவர். வாழ்க்கை புணர்ச்சியிலேயே நிகழுமாயினும் நெடிய பயன் விளையாது. அது போலவே, பிணங்குதலில் பெரும்பொழுது கழியுமாயினும் பயனில்லை. இவ்விரண்டும் கலந்ததே வாழ்க்கை.

நிலத்தொடு தண்ணீர் கலக்கிறது; ஒன்றாகிறது. கட்புலனுக்காகும் நீர் வெள்ளம் நிலத்தின் இயல்பைப் பெற்று விளங்குகிறது. நிலத்தின் வண்ணத்தை நீர் அடைகிறது; நிலத்தின் சுவையையும் நீர் அடைகிறது. இதனையே

'செம்புலப் பெயல்நீர் போல'

என்று குறுந்தொகையும் பேசுகிறது. தண்ணீருக்கு வண்ணம் இல்லை; சுவையில்லை. ஆனால், செம்மண் தரையைச் சார்ந்த தண்ணீர், அச் செம்மண்ணின் வண்ணத்தையும் சுவையையும் பெற்று விளங்குகிறது. நிலத்திற்கும் நீருக்கும் உள்ள உறவைப் போல, உள்ளத்தால் ஒன்றாகிய உறவுடையோர், புணர்தலினும் இன்பம் காண்பர்; பிணங்குதலிலும் இன்பங் காண்பர். ஏன்? இத்தகையவர்கள் புணர்தலில் காணும் இன்பத்தை விடப் பிணங்குதலில் புத்தேள் நாட்டு இன்பத்திலும் சிறந்த இன்பத்தை அனுபவிப்பர். அன்பிற் கலந்து ஒன்றாய நெஞ்சுடை