பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 39


அமைந்து விட்டன. திருவள்ளுவர் இறைநெறி சார்ந்த ஒழுக்கமாகப் பொறிவாயில் ஐந்தவித்தலையே கூறுகின்றார்.

“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடு வாழ்வார்.”

(6)

என்பது குறள். இந்தத் திருக்குறளுக்குப் “பொறிகளை அடக்குதல்” என்று அறியாதார் பொருள் கொள்வர். இது தவறான கருத்து. இயற்கைக்கு முரண்பட்டதும்கூட, “அடக்கு அடக்கு என்பர். அம்மா பொருளொன்றும் அறிந்திலனே!” என்று சான்றேர் அருளியுள்ளமை காண்க! பொறிகள், புலன்களில் இயக்கத்தை முறைப்படுத்தி, நெறிப்படுத்தி வாழ்ந்து பயன் கொள்ளுதல் என்பதே முறை.

உயிரியற்கை சென்றவிடத்தெல்லாம் செல்வது. அதனை அங்ங்னம் செல்லவிடாது தடுத்துச் செலுத்தி மடைமாற்றம் செய்து நன்னெறிப்படுத்துதலே திருக்குறள் நெறி. சுவையும் பயனும் இல்லாதனவற்றைச் சமைத்தல் வழிப் பக்குவப்படுத்துதல் போல, அதாவது கிழங்கு அவித்தல் என்று சொல்வதைப் போலப் “பொறிவாயில் ஐந்தவித்தான்” என்ற சொல்லுக்குப் பொருள் கொள்ள வேண்டும். அதாவது மானிடப் பரப்பாகிய சமுத்திரத்தில் மனிதன் சங்கமம் ஆவதற்குரிய தகுதியைப் பெறவேண்டும். அந்த வாழ்க்கையே பொறிவாயில் ஐந்தவித்தான் ஒழுக்க நெறிநிற்கும் வாழ்க்கை. திருக்குறள் காட்டும் சமய வாழ்க்கை. இறைவழிபாடும் இதுவே.

மானுடம் வெற்றி பெறத் திருக்குறள் எழுந்தது. மானுடம் வாழ்வாங்கு வாழத் திருக்குறள் நெறி வழி காட்டுகிறது. வாழ்வாங்கு வாழ்தல் என்றால் பொருள் என்ன? மானுடத்திற்கு வாய்த்த பொறி, புலன்கள் ஆற்றல் உடையவை; படைப்பாற்றல் உடையவை. ஐந்தவித்தான் ஆற்றல் அளப்பரியது என்றும் திருக்குறள் கூறும். இங்கும் பொறி, புலன்களை அறிவார்ந்த நிலையில் - பயனுறு