பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


‘பொருள்’ வேறு என்று பிரித்துக் கூறியுள்ளமை அறிக. உண்பன, தின்பனவாகிய உணவுப் பொருள்களை உற்பத்தி செய்து குவிக்கவேண்டும். "வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்" என்றான் பாரதி; மேலும் ஒருபடி மேலே போய்,

“தனியொருவனுக்கு உணவு இல்லை யெனில்
சகத்தினை அழித்திடுவோம்”

என்றும் கூறினான். திருவள்ளுவர்,

“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக வுலகியற்றி யான்”

(1062)

என்று கூறுகிறார். ஆதலால் திருக்குறள் நெறி, நுகர்பொருள் உற்பத்தி குவிக்கும் நெறி.

பசியும் பட்டினியும் இல்லாத நாட்டைக் காண்பதே திருவள்ளுவர் நெறியின் நோக்கம்.

கடவுள் இருக்கிறார்; பக்தி இருக்கிறது; மனிதன் இருக்கிறான். மனிதப் பிறப்பு உயர்ந்தது; மிக மிக உயர்ந்தது. மனிதனுக்கு வாய்த்த பொறி புலன்கள் அளவற்ற ஆற்றலுடையன; படைப்பாற்றலுடையன. இவ்வளவு இருந்தாலும் மனிதனை மனிதனாக்கும் அன்பு இல்லையேல் வெறும் என்பு தோல் போர்த்த உடம்புதான். மனிதனுடைய உயிர் நிலை அன்பில்தான் நிலை பெற்று இருக்கிறது. “அன்பின் வழியது உயிர் நிலை” என்றது திருக்குறள். திருவள்ளுவர் நெறி, அன்பு நெறி. அன்பு நெறியே அறநெறி. அன்பு பிறர் நலத்தையே நாடும். தியாகம் செய்யும்.

“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு”

(72)