பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 43


என்பது திருக்குறள். மானுட வாழ்வு தியாகத்திற்கே உரியது. மலர் மலர்ந்து மணம் பரப்பி உதிர்வதைப் போலத்தான் மானுட வாழ்க்கையும் அமையவேண்டும். திருவள்ளுவர் நெறி ஒப்புரவு நெறி. உலகத்தோடு ஒட்ட ஒழுகும் நெறி. ஒத்தது அறிந்து செய்து வாழும் நெறி.

திருக்குறளில் விருந்தோம்பல், ஈகை, ஒப்புரவு ஆகிய அதிகாரங்கள் அமைந்துள்ளன. இம் மூன்றும் ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையன. ஆனால், பரிணாம வளர்ச்சியில் ஒன்றைவிட ஒன்று வளர்ந்தது. இலட்சியத்தின் எல்லை ஒப்புரவேயாம். விருந்தோம்பல் மிக அரிய பண்புதான். ஆயினும் இயல்பாக நிகழக்கூடியது ஒரோ வழிதான். இழப்பு நேரினும் ஈதல், கொடுத்தல், உதவி செய்தலாகிய பண்பு எல்லோர் மாட்டும் இயல்பாக வருவதில்லை. ஆனால், ஈதற் பணியில் புகழ் பெற்றவர்கள் தமிழக வரலாற்றில் உண்டு. ஈதல் இயலாத நிலையில் சாவைக்கூட வரவேற்றுள்ளனர்.

“சாதலின் இன்னாத தில்லை; இனிததுரஉம்
ஈதல் இயையாக் கடை”

(230)

என்பது திருக்குறள். ஆயினும் ஈதற் பண்பிலும் விழுமியதாக, சிறந்ததாக விளங்குவது ஒப்புரவுப் பண்பே. ஒப்புரவு நெறியில் நம்பிக்கை, நல்லெண்ணம் கால்கொள்கிறது. ஈதற் பண்பில் கொடுப்பார் உண்டு வாங்குவார் உண்டு; இரு வேறு நிலை உண்டு. ஒப்புரவு நெறியில் அஃது இல்லை. ஒப்புரவு உரிமையும் கடமையும் இணைந்த நெறியாகும். கொள்வார் - கொடுப்பார் என்ற நிலை ஒப்புரவு நெறியில் இல்லை. மாமுனிவர் மார்க்ஸ் இலண்டனில் தங்கியிருந்த காலத்தில் அவர் வீட்டில் பண்டத்தை வைத்துப் பூட்டும் பழக்கம் இல்லை. மேசையின் டிராயரில் பணம் இருக்கும். கார்ல் மார்க்சின் நண்பர்கள் பலர் அங்கு வருவர். அவர்களில் யாருக்காவது பணம் தேவையானால் எடுத்துக்கொண்டு போவார்கள். திரும்பக் கிடைத்தபொழுது கொண்டு வந்து