பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 45


புழுங்கிப் பகைமை உள்ளம் கொண்டு பழிவாங்க நினைத்து நஞ்சு கொடுப்பர். அப்படி நஞ்சு கொடுத்தாலும் நஞ்சை உண்பதே நனி நாகரிகம் என்று நற்றிணை பேசும்.

“முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்”

என்பது நற்றிணைப் பாடல்.

“பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்”

(580)

என்று திருக்குறள் கூறுகிறது. தன் கண் முன்னாலேயே தனக்கு நஞ்சைக் கொடுத்தாலும் மனத்தில் சலனமின்றி வெறுப்பும் பகை உணர்வும் இன்றி அந்த நஞ்சை மன நிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் குடித்துச் சாகாமல் வாழ்பவர்கள் நாகரிகமுடையவர்கள் என்று திருக்குறள் கூறுகிறது. தூய செங்குருதி ஒடும் உடலில் நஞ்சின் தாக்கம் பலிக்காது; நஞ்சு வலிமை இழக்கும். ஆதலால் “நஞ்சுண்டு அமைவர்” என்றார் திருவள்ளுவர்.

நன்றே செய்யும் கடப்பாட்டு நெறியே திருவள்ளுவர் நெறி. ஒருவர் ஒருவருக்கு நன்மையே செய்யாமல் இருந்திருக்க மாட்டார். ஏதாவது ஒரு நன்மை எந்தக் காலத்திலாவது செய்திருப்பார். பின், எழுந்த கருத்து வேற்றுமைகளால் கசப்புணர்வு வளர்ந்த காரணத்தால் கொலை நிகர்த்த கொடிய துன்பங்களைக் கூடச் செய்யலாம்; செய்யக்கூடும். அந்தச் சூழ்நிலையில் என்ன செய்வது? நாமும் எளிதில் பகை கொள்வதா? நாமும் கெடுதல் செய்வதா? வம்புகளை வளர்ப்பதா? இவையெல்லாம் திருவள்ளுவருக்கு உடன்பாடல்ல. பின் இந்த இடர்ப்பாடான சூழ்நிலையில் திருவள்ளுவர் நெறி என்ன? உன்னுடன் பழகியவர்கள் உனக்குக் கொலையணைய கொடுந்துன்பங்களைச் செய்யும் பொழுதும் செய்பவர் மீது சினவற்க, பகை கொள்ளற்க; யாதொரு தீமையும் செய்யற்க! அந்த நேரத்தில் முன்பு அவர்