பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நடத்தி வருகின்றனர் என்று கூறுவது மரபு. ஆதலால், திருவள்ளுவர் தமது நூலை, இல்லற நெறியில் தொடங்குகின்றார். “அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை” என்று வலியுறுத்துகின்றார். இல்லற இயலில் பெண்ணினத்தைப் பெருமைப்படுத்துகின்றார். “பெண்ணிற் பெருந்தக்க யாவுள?” என்று வினா எழுப்புகின்றார். பெண், பெருமைக்குரியவளாக அமையாவிடின் ஆணுக்கு, “இகழ்வார் முன் ஏறுபோல் பீடுநடை இல்லை” என்று கூறுகின்றார். இல்லறத்தின் அச்சாக விளங்கும் வாழ்க்கைத் துணை நலத்திடம் பொறுப்புக்களை ஒப்படைக்கின்றார். குடும்பத் தலைவியை “வாழ்க்கைத் துணை நலம்” என்று குறிப்பிடுவதன் மூலம், திருவள்ளுவர், இல்லற வாழ்க்கையில் தலைவனுக்குத் தலைவி துணை; துணை மட்டுமல்ல நலமும் கூட என்று அறிவுறுத்தும் பாங்கறிக. இல்லறத்தின் சிறப்பைத், தலைமுறை தலைமுறையாக வரும் குடும்பப் புகழை - ஏன்? கணவனின் கற்பைக் கூடப் பெண்ணே காப்பாற்ற வேண்டும் என்று தலைவியின் கடமையை உணர்த்தும் பாங்கு அறநெறியின் பாற்பட்டது.

“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்,”

(56)

என்பது திருக்குறள். இல்லத் தலைவி, மனைமங்கலம். அதன் நன்கலம் நன்மக்கட் பேறு. மானுடத்தின் வரலாறு சிறக்க, குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக வளர நன்மக்கள் தேவை. மக்கட் பேறு இயற்கை. நன்மக்கட்பேறு குடும்பத் தலைவனும் தலைவியும் நோன்பிருந்து பெற வேண்டிய ஒன்று. நல்ல தாய், நல்ல தந்தை என்று புகழ் பெற நன்மக்களை ஈன்று புறந்தருதல் வேண்டும். தந்தை, கல்வி தந்து வளர்க்க வேண்டும்; சான்றோனாக்க வேண்டும். அந்த இளைஞன்